“அரசியல் எனக்கு புதுசுதான்… ஆனா மதுரை என் கோட்டை!”… பிடிஆருக்கு எதிராக களமிறங்கும் சுந்தர் சி!… அதிரும் தேர்தல் களம்…!!

By Muthu Mani on சித்திரை 1, 2026

Spread the love

மதுரை மத்திய சட்டமன்றத் தொகுதியின் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளராகப் பிரபலத் திரைப்பட இயக்குநரும் நடிகருமான சுந்தர் சி. அறிவிக்கப்பட்டுள்ளார். புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி. சண்முகம் முன்னிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், அதிமுகவின் இரட்டை இலைச் சின்னத்தில் தாம் போட்டியிடுவதாகத் தெரிவித்தார். மதுரை மேற்குத் தொகுதியில் பாஜகவின் தாமரைச் சின்னத்தில் தங்கள் கட்சி போட்டியிடுவதாகவும், இந்த ஆட்சி மாற்றத்தில் சுந்தர் சி. நிச்சயம் சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்று வருவார் என்றும் ஏ.சி. சண்முகம் நம்பிக்கை தெரிவித்தார்.

தனக்கு இந்த வாய்ப்பினை வழங்கிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஏ.சி. சண்முகம் ஆகியோருக்கு நன்றி தெரிவித்த சுந்தர் சி., திரைத்துறை தமக்கு அத்தப்படியாக இருந்தாலும் அரசியல் களம் புதியது என்று குறிப்பிட்டார். மதுரை மீனாட்சி அம்மன் அருள் மற்றும் மக்கள் மீது வைத்துள்ள நம்பிக்கையினால் தமக்கு வெற்றி கிட்டும் என்று கூறிய அவர், பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்கும் தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார்.

   

மதுரைத் தொகுதியைத் தேர்ந்தெடுத்ததற்கான காரணம் குறித்துப் பேசிய அவர், இது புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மற்றும் புரட்சித் தலைவி ஜெயலலிதாவின் கோட்டை என்று புகழாரம் சூட்டினார். மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனையை விரைந்து திறக்க நடவடிக்கை எடுப்பது, சாலை மற்றும் மேம்பால வசதிகளை மேம்படுத்துவது போன்ற உள்கட்டமைப்புப் பணிகளுக்காகவே இத்தொகுதியைத் தேர்வு செய்துள்ளதாகத் தெரிவித்தார். படப்பிடிப்பிற்காகப் பலமுறை மதுரை வந்திருப்பதால் இங்கிருக்கும் மக்களின் தேவைகள் குறித்துத் தமக்கு நன்றாகத் தெரியும் என்றும் அவர் கூறினார்.

   

எதிர்த்தரப்பில் போட்டியிடும் மூத்த அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் குறித்த கேள்விக்கு பதிலளித்த சுந்தர் சி., போட்டி என்பது எல்லா இடங்களிலும் கடினமாகத்தான் இருக்கும் என்றும், அதற்காக ஒதுங்கிப் போகாமல் வெற்றி பெறவே போராடுவேன் என்றும் உறுதிபடத் தெரிவித்தார். வரும் ஏப்ரல் 4-ம் தேதி காலை 11 மணிக்குத் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்துவிட்டு, கூட்டணிக் கட்சித் தலைவர்களின் ஆதரவுடன் முழு வீச்சில் பிரச்சாரத்தைத் தொடங்கப் போவதாகவும் அவர் உற்சாகமாகக் குறிப்பிட்டார்.