உத்தரப் பிரதேச மாநிலத்தில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தனது சகோதரிக்கு உணவு வழங்கிவிட்டு வீட்டிற்குத் திரும்பிக்கொண்டிருந்த 10 வயது சிறுமியை, அம்மாநிலக் காவல் துறையைச் சேர்ந்த அபிஷேக் யாதவ் எனும் காவலர் தனது இருசக்கர வாகனத்தில் ஏற்றிச் சென்றுள்ளார். காவல் துறைச் சீருடையில் இருந்ததால் அச்சிறுமியும் அவரை நம்பிச் சென்றுள்ளார். ஆனால், அந்த நபர் சிறுமியை சுமார் 15 கி.மீ தொலைவில் உள்ள மயானப் பகுதிக்குக் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாகக் கொலை செய்த பின், உடலை ஆற்றில் வீசியுள்ளார்.
சுமார் 100-க்கும் மேற்பட்ட கண்காணிப்புக் கேமரா பதிவுகளை ஆய்வு செய்து குற்றவாளியைக் காவல்துறையினர் கைது செய்தனர். மருத்துவப் பரிசோதனைக்காக அவரை அழைத்துச் சென்றபோது, ஆத்திரமடைந்த பொதுமக்கள் அந்தப் போலிஸ்காரரை நடுரோட்டில் வைத்துத் தர்ம அடி கொடுத்துத் தங்களது கோபத்தை வெளிப்படுத்தினர். பாதுகாப்பளிக்க வேண்டிய காவல் துறையினரே இத்தகைய கொடூரச் செயலில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
