ஹரித்வாரில் இருந்து பந்த்ரா நோக்கிச் சென்ற ரயிலில் பயணம் செய்த பயணி ஒருவருக்கு, டிக்கெட் பரிசோதகரின் அலட்சியத்தால் பெரும் சங்கடம் ஏற்பட்டுள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. ஹரித்வாரில் ரயிலில் ஏறிய அந்தப் பயணி, அங்கு வந்த முதல் டிக்கெட் பரிசோதகரிடம் தனது ரயில் டிக்கெட் மற்றும் அடையாளச் சான்றைக் காண்பித்து உறுதிபடுத்தியுள்ளார். பின்னர், தனது உடமைகளைத் தன் இருக்கையில் வைத்துவிட்டு, அதே ரயிலில் வேறு பெட்டியில் இருந்த தனது நண்பரைப் பார்க்கச் சென்றுள்ளார். அப்போது வந்த டிக்கெட் பரிசோதகர் இருக்கை எண் 12-ல் பயணி இல்லை என்று கருதி, தரவுத் தளத்தில் அவர் வரவில்லை எனப் பதிவு செய்துள்ளார்.
இதன் காரணமாகத் தொடர்ந்து வந்த மற்றொரு டிக்கெட் பரிசோதகர் , “உங்கள் இருக்கை ஆப்ஸென்ட் என உள்ளது, நீங்கள் டெல்லியில் இருந்து ஏறியதாகக் கருதி புதிய டிக்கெட் மற்றும் அபராதம் செலுத்த வேண்டும், இல்லையெனில் ரயிலை விட்டு இறங்க வேண்டும்” எனக் கூறி மிரட்டியுள்ளார். “தான் ஹரித்வாரிலேயே ஏறிவிட்டதாகவும், முதன்முறை வந்த டிக்கெட் பரிசோதகரிடம் டிக்கெட் காட்டிவிட்டதாக பயணி கூறியும் அவர் கேட்க மறுத்துள்ளார். ரயில்வேயின் இந்த அலட்சியப் போக்கிற்குப் பயணிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
