தமிழ் சினிமாவில் நகைச்சுவை அம்சத்தோடு வரும் படங்களுக்கு எப்போதுமே மிகப்பெரிய வரவேற்பு ரசிகர்கள் மத்தியில் இருக்கும். பாமா விஜயம், காதலிக்க நேரமில்லை முதல் ஆண்பாவம், உள்ளத்தை அள்ளித்தா என இந்த பட்டியல் நீளும். இப்படி 1985 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படமான ஆண்பாவம் இன்றளவும் கொண்டாடப்படும் ஒரு படமாக அமைந்துள்ளது.
கன்னிராசி மூலம் இயக்குனராக அறிமுகமான இயக்குனர் பாண்டிராஜனின் இரண்டாவது படம் ஆண்பாவம். பாண்டியனோடு அவரும் ஒரு கதாநாயகனாக அந்த படத்தில் நடித்திருந்தார். அண்ணன் தம்பியான பெரிய பாண்டி, சின்ன பாண்டி ஆகியவர்களின் குறும்புத்தனமான வாழ்க்கையில் திருமணம் குறுக்கிடும்போது ஏற்படும் குழப்பங்களும், அதன் பின்னான முடிவுகளுமே இந்த படத்தின் கதை.
இந்த படத்தை ஆரம்பம் முதல் இறுதிவரை வயிறுவலிக்க சிரிக்க வைக்கும் விதமாக திரைக்கதை அமைத்திருந்தார் பாண்டியராஜன். அதனால் இன்றளவும் கொண்டாடப்படும் ஒரு படமாக உள்ளது. இந்த படத்தின் 175 ஆவது நாள் விழா நடந்தபோது அதில் இயக்குனர் மணிரத்னம் கலந்துகொண்டு பேசியுள்ளார்.
அப்போது அவர் “எனக்கு பெரிதாக வாய்ப்புகள் இல்லாத சூழலில் பாண்டியராஜன் சாரிடம் சென்ற ஒரு தயாரிப்பாளரிடம், நான் உங்களுக்குப் படம் பண்ணவேண்டும் என்றால் மணிரத்னத்தை இயக்குனராக நியமியுங்கள். அவர் அதற்கு சம்மதம் சொன்னால் நான் உங்களுக்குப் படம் பண்ணுகிறேன் என்று சொன்னார். அந்த நன்றிக்காகதான் நான் இந்த நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறேன்” என்று பேசினாராம்.
ஏனென்றால் அப்போது மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பகல் நிலவு மற்றும் இதயக் கோவில் ஆகிய இரு திரைப்படங்களும் பெரிய வெற்றியைப் பெறவில்லை. மௌன ராகம் படம் இன்னும் ரிலீஸாகி இருக்கவில்லை. ஆனால் அப்போதே மணிரத்னத்தின் திறமையைக் கண்டறிந்து அவருக்கு ஒரு வாய்ப்புக் கொடுக்கவேண்டும் என பாண்டியராஜன் நினைத்துள்ளார்.