நேபாள-திபெத் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட திடீர் பனிப்பாறை உடைப்பு மற்றும் அதைத் தொடர்ந்து உருவான காட்டாற்று வெள்ளம் உலகையே உலுக்கியுள்ளது. போடேகோஷி நதியின் கிளை நதியான லெண்டேயில் ஏற்பட்ட பனிச்சரிவு, இயற்கை ஏரியை உடைத்துக்கொண்டு வீடுகள், பாலங்கள் என அனைத்துடனும் அசுர வேகத்தில் பாய்ந்தது. சேறும் சகதியுமாக மாறியுள்ள ரசுவா, நுவாகோட் உள்ளிட்ட எட்டு மாவட்டங்களில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 600-ஐ நெருங்குவதோடு, 2,500-க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை என்பதால் அப்பகுதியே சோகத்தில் மூழ்கியுள்ளது.
இந்த கோரப் பேரிடர் ஒருபுறமிருக்க, 2026-2027-ஆம் ஆண்டிற்கான சுத்த வாக்கிய சர்வமூத்த பஞ்சாங்கத்தில் இத்தகைய இயற்கை சீற்றங்கள் குறித்து முன்பே துல்லியமாகக் கணிக்கப்பட்டிருந்த செய்தி தற்போது பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. காத்மாண்டு மற்றும் இமாச்சலப் பிரதேசத்தில் அதிக மழைப்பொழிவு இருக்கும் என்றும், குறிப்பாக சீனாவுக்கு அருகிலுள்ள திபெத் மலையில் பனிப்பாறைகள் உருகிப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் அந்த பஞ்சாங்கத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. அறிவியல் ஆய்வாளர்கள் கூறுவது போலவே பஞ்சாங்கத்திலும் பனி உருகும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது சமூக வலைதளங்களில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
இயற்கைப் பேரிடர்கள் மட்டுமன்றி, சமூக மற்றும் அரசியல் மாற்றங்கள் குறித்தும் இந்த பஞ்சாங்கம் பல்வேறு கணிப்புகளை வெளியிட்டுள்ளது. ஆன்லைன் வர்த்தகத்தில் வடமாநில கும்பலின் மோசடிகள் அதிகரிப்பது, சித்த மருத்துவ துறையில் தமிழ்நாடு முதலிடம் வகிப்பது, அடிக்கடி மின்தடை ஏற்படுவது மற்றும் பொதுமக்களிடையே பணப்புழக்கம் குறைவது போன்ற பல விஷயங்கள் அதில் முன்னறிவிப்பாகக் கூறப்பட்டுள்ளன. மேலும், வனத்துறையின் நவீன வளர்ச்சி மற்றும் மக்களுக்கு ஏற்படும் தீராத விஷக்காய்ச்சல் பற்றிய எச்சரிக்கைகளும் அதில் இடம்பெற்றுள்ளன.
இவை அனைத்தையும் விட மேலாக, கடந்த அரை நூற்றாண்டுக்கும் மேலாகத் தனிப்பெரும் ஆட்சிகளைக் கண்டு வந்த தமிழ்நாட்டில், விரைவில் “கூட்டணி ஆட்சி” அமைய வாய்ப்புள்ளது என்ற கணிப்பும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது. நேபாளத்தில் நடந்த பனிப்பாறை உடைப்புச் சம்பவமும், பஞ்சாங்கத்தின் கணிப்புகளும் ஒன்றுடன் ஒன்று பொருந்திப்போவது மக்களை ஆச்சரியத்திலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது.
