ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்குப் பிறகு இந்தியா–பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட விசா மற்றும் எல்லைப் போக்குவரத்து கட்டுப்பாடுகளால், பல பாகிஸ்தான் சிந்திப் பெண்களின் திருமணங்கள் நீண்ட காலமாகத் தாமதமாகின. பல ஆண்டுகளாக வாகா–அட்டாரி எல்லை வழியாக இந்தியா வந்து திருமணங்களை நடத்தி வந்த சிந்து மாகாணக் குடும்பங்கள், கடந்த ஆண்டு விதிக்கப்பட்ட விசா கட்டுப்பாடுகளால் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இதனால், இந்தியாவில் ஏற்கனவே நிச்சயிக்கப்பட்டிருந்த ஏராளமான திருமணங்கள் தள்ளிப்போயின.
இந்தச் சிக்கலைத் தீர்க்கும் வகையில், ராய்ப்பூரைச் சேர்ந்த ஷதானி தர்பார் ஆன்மிகத் தலைவர் சந்த் யுதிஷ்டிர்லால் ஷதானி, இந்தியாவில் திருமணம் செய்யக் காத்திருந்த பாகிஸ்தான் பெண்களின் பட்டியலைத் தயாரித்து மத்திய உள்துறை அமைச்சகத்திடம் வழங்கினார். அதன் அடிப்படையில், குறைந்தது 150 பாகிஸ்தான் பெண்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் இந்திய அரசு விசா வழங்கியுள்ளதாக சமூகத் தலைவர் ராஜேஷ் ஜாம்பியா தெரிவித்துள்ளார். விசா பெற்ற இவர்கள் தற்போது துபாய், ஓமன், இலங்கை, வங்கதேசம் உள்ளிட்ட நாடுகள் வழியாக விமானம் மூலம் இந்தியா வந்துள்ளனர்.
இவ்வாறு இந்தியா வந்துள்ள இந்தப் பெண்களுக்காக நாக்பூர், ராய்ப்பூர், ஜோத்பூர் மற்றும் புனே ஆகிய நகரங்களில் சுமார் 150 திருமணங்கள் நடைபெற உள்ளன; இதில் நாக்பூரைச் சேர்ந்த 15 குடும்பங்களும் பயனடைந்துள்ளனர். இதற்கிடையில், பாகிஸ்தானில் இன்னும் சுமார் 300 பெண்கள் இந்தியாவில் உள்ள தங்கள் வருங்கால கணவர்களைத் திருமணம் செய்வதற்காகக் காத்திருப்பதாகக் கூறப்படுகிறது. அவர்களது நிலையைக் கருத்தில் கொண்டு, அவர்களுக்கும் விசா வழங்க வேண்டும் என இந்திய அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
