புதுச்சேரியில் ரேஷன் கடைகளில் இலவச அரிசி மற்றும் கோதுமைகள் வழங்கப்பட்டு வரும் நிலையில் சத்துணவுக்காக ஒரு கிலோ கேழ்வரகு மாவு இலவசமாக வழங்கப்படும் என அம்மாநில முதல் மந்திரி ரங்கசாமி புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரி அரசு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் இலவச பொங்கல் பரிசாக மளிகை தொகுப்புகளை வழங்க அறிவிப்பு வெளியிட்டது. இதன் மதிப்பு சுமார் 750 ரூபாய் ஆகும். புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள அனைத்து ரேஷன் அட்டைதாரர்களும் இந்த பொங்கல் பரிசை பெற்றுக் கொள்ளலாம். ஜனவரி 3ஆம் தேதி முதல் ரேஷன் கடைகள் மூலமாக வழங்கப்படும்.
புதுச்சேரி அரசு அறிவித்து இருந்த பொங்கல் தொகுப்பில் 4 கிலோ பச்சரிசி, ஒரு கிலோ நாட்டு சக்கரை, ஒரு கிலோ பாசிப்பருப்பு, 300 கிராம் நெய் மற்றும் ஒரு லிட்டர் சூரியகாந்தி எண்ணெய், துணிப்பை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் புதுச்சேரியில் ரேஷன் கடைகளில் இலவசமாக ஒரு கிலோ கேழ்வரகு மாவு வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார். மஞ்சள் ரேஷன் அட்டைக்கு 10 கிலோ இலவச அரிசி, சிவப்பு ரேஷன் அட்டைக்கு இருபது கிலோ அரிசி வழங்கி வந்த புதுச்சேரி அரசு 2 கிலோ இலவச கோதுமையும் வழங்கி வருகின்றது. இதனை தொடர்ந்து கேழ்வரகு மாவு இலவசமாக வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்ததால் தற்போது ரேஷன் கடைகளில் ஒரு கிலோ கேழ்வரகு மாவு இலவசமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு ரேஷன் அட்டைதாரர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
