தமிழகத்தில் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுக, திமுக, நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழக வெற்றிக்கழகம் என நான்குமுனை போட்டி நிலவுகிறது. இதனால் பல கட்சிகளும் இந்த கட்சிகளுடன் கூட்டணி நிலைப்பாட்டை உறுதி செய்து வருகின்றன. ஆனால் இன்னும் ஒரு சில கட்சிகள் கூட்டணி தொடர்பான அறிவிப்பை வெளியிடாமல் மௌனம் காத்து வருகின்றன. இதனிடையே பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ள அதிமுக இந்த முறை எப்படியாவது ஆட்சியை கைப்பற்றி விட வேண்டும் என்ற முனைப்பில் செயல்பட்டு வருகிறது.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு தொடர் தோல்விகளை மட்டுமே சந்தித்து வரும் ஈ பி எஸ் இந்த தேர்தலை குறிவைத்து பல வியூகங்களை வகுத்து வருகின்றார். இதனிடையே அதிமுக மீண்டும் ஒன்றிணைந்தால் மட்டுமே வெற்றி பெற முடியும் என பலரும் குரல் எழுப்பி வரும் நிலையில் இ பி எஸ் அதற்கெல்லாம் இடம் கொடுக்காமல் தனக்கு எதிராக குரல் கொடுப்பவர்களை கட்சியிலிருந்து நீக்கி வருகிறார். இப்படியான நிலையில் அதிமுக மற்றும் பாஜக கூட்டணியில் நேற்று அன்புமணி தலைமையிலான பாமக இணைந்தது.
இதனிடையே டெல்லி சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்சாவை சந்தித்த பிறகு இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த இபிஎஸ், எங்கள் கூட்டணியில் ஓபிஎஸ்-க்கு இடமில்லை என்று கூறிவிட்டார். இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தபோது பேசிய ஓபிஎஸ், நான் ஏற்கனவே பலமுறை கூறிவிட்டேன். தை பிறக்கும் வரை பொறுமையாக இருங்கள். தை பிறந்தால் வழி பிறக்கும் என்று ஒரே வார்த்தையில் முடித்துவிட்டு சென்றார்.
