இந்திய அஞ்சல் துறை நாடு முழுவதும் காலியாக உள்ள கிராமின் தாக் சேவக், கிளை அஞ்சல் அதிகாரி மற்றும் உதவி கிளை அஞ்சல் அதிகாரி ஆகிய பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
மொத்தம் உள்ள 23,757 காலிப் பணியிடங்களில், தமிழக அஞ்சல் வட்டத்திற்கு மட்டும் 2,118 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்தப் பணியிடங்களுக்கு எந்தவித எழுத்துத் தேர்வும் கிடையாது; 10-ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலேயே தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர். 18 முதல் 40 வயது வரை உள்ளவர்கள் இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
செப்டம்பர் 19-ஆம் தேதி வரை ஒருமுறை பதிவு செய்யவும், செப்டம்பர் 2 முதல் செப்டம்பர் 21 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கவும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் இந்திய அஞ்சல் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக விரைந்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
