கன்னியாகுமரி மாவட்டம் கடையாலுமூடு பேரூராட்சிக்கு உட்பட்ட பிலாங்காலை பகுதியில், டிடிசிபி (DTCP) விதிமுறைகளை மீறி சாலை நிலத்தை அரசுக்கு ஒப்படைக்காமல் பிளாட் போட்டு விற்பனை செய்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்பு தனியார் நில உரிமையாளர்கள் சாலை வசதி எனக் காட்டி நிலத்தை விற்பனை செய்துள்ளனர். ஆனால், அந்த சாலைக்கான இடத்தைப் பேரூராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைக்காமல் தங்களது பெயரிலேயே வைத்துக்கொண்டு முறைகேடு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால், அங்கு வசிக்கும் மக்கள் மின்சாரம் மற்றும் குடிநீர் போன்ற அடிப்படை வசதிகளைத் தங்களது சொந்த முயற்சியில் பெற்ற போதிலும், முறையான சாலை வசதி இன்றி தவித்து வருகின்றனர்.
அதிகாரிகளுக்கு வழங்கப்பட்ட லஞ்சமே இந்த விதிமுறை மீறல்களுக்குக் காரணம் எனப் பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். சாலை நிலம் முறையாக அரசுக்கு ஒப்படைக்கப்படாததால், தற்போது அங்கு சாலை அமைக்க முற்படும்போது “இது தனியார் இடம், எங்களால் தலையிட முடியாது” எனப் பேரூராட்சி நிர்வாகம் கைகழுவி விட்டதாகக் கூறப்படுகிறது. இதன் விளைவாக, மழைக்காலங்களில் சேறும் சகதியுமான சாலையில் முதியவர்களும் பள்ளி மாணவர்களும் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். மேலும், அவசர காலங்களில் ஆம்புலன்ஸ் போன்ற வாகனங்கள் கூட இப்பகுதிக்குள் வர முடியாத அவல நிலை நீடிக்கிறது.
தங்களது நியாயமான கோரிக்கைகள் பலமுறை மனு அளித்தும் நிராகரிக்கப்பட்டதால், ஆத்திரமடைந்த பிலாங்காலை பகுதி மக்கள் வரும் சட்டமன்றத் தேர்தலைப் புறக்கணிக்கப் போவதாக அதிரடி முடிவெடுத்துள்ளனர். இது தொடர்பாக ஊரின் நுழைவாயிலில் பேனர் வைத்துத் தங்களது எதிர்ப்பைப் பகிரங்கமாக வெளிப்படுத்தியுள்ளனர். ஒரு ரியல் எஸ்டேட் அதிபரின் லாப நோக்கத்திற்காகச் சாமானிய மக்கள் அடிப்படை வசதிகளின்றிப் போராடும் இந்தச் சம்பவம் கன்னியாகுமரி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
