வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே உள்ள மேல்பாடியில், ஜனவரி 8, 2026 அன்று தமிழ்நாடு அரசின் சிறப்பு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் நீர்வளத்துறை அமைச்சரும், திமுக பொதுச்செயலாளருமான துரைமுருகன் கலந்துகொண்டு பொதுமக்களுக்குப் பொங்கல் தொகுப்புகளை வழங்கினார். அவருடன் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் ஆகியோர் உடனிருந்தனர்.
விழாவில் உரையாற்றிய அமைச்சர் துரைமுருகன், 2026-ம் ஆண்டு பொங்கல் பண்டிகை மக்கள் அனைவருக்கும் முன்னெப்போதும் இல்லாத வகையில் மிகுந்த மகிழ்ச்சியைத் தரும் ஆண்டாக அமையும் என்று குறிப்பிட்டார். அரசுக்குக் கூடுதல் நிதிச்சுமை ஏற்பட்டாலும், அதைப் பொருட்படுத்தாமல் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு மக்களுக்காகத் தொடர்ந்து பல்வேறு சிறப்பான நலத்திட்டங்களைச் செயல்படுத்தி வருவதாக அவர் பெருமிதத்துடன் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர் அரசு சார்பில் பொங்கல் பரிசாக வழங்கப்பட்டு வரும் 3,000 ரூபாய் மற்றும் பல்வேறு நலத்திட்டங்களை மக்கள் கருத்தில் கொள்ள வேண்டும் என்றும், அரசு மக்களுக்குச் செய்து வரும் இந்த உதவிகளை மனதில் வைத்து, தேர்தலின் போது மக்கள் தங்கள் வாக்குகளை அளிக்க வேண்டும் என்றும் அவர் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டார். அமைச்சரின் இந்தப் பேச்சு அரசியல் வட்டாரத்தில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
