பிரபல நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் டிசம்பர் 28-ஆம் தேதி உடல்நல குறைவால் உயிரிழந்தார். அவருக்கு திரை பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், ரசிகர்கள் உள்பட ஏராளமானோர் அஞ்சலி செலுத்தியுள்ளனர். சென்னை அண்ணா சாலை அருகே இருக்கும் தீவுத்திடலில் அஞ்சலிக்காக விஜயகாந்தின் உடல் வைக்கப்பட்டது.
அப்போது முன்னணி நடிகர்களான கமல், ரஜினி, விஜய், விஜய் ஆண்டனி குஷ்பூ உள்ளிட்ட ஏராளமானோர் நேரில் வந்து விஜயகாந்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர். பின்னர் விஜயகாந்த் உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு தேமுதிக அலுவலகத்தில் அடக்கம் செய்யப்பட்டது. கேப்டன் விஜயகாந்தின் மறைவிற்கு வடிவேலு, அஜித் உள்பட திரை பிரபலங்கள் வரவில்லை.
இதனால் ரசிகர்கள் சார்பில் பல கண்டனங்கள் எழுந்தது. கேப்டன் இறந்த செய்தியை கேட்ட அஜித் விஜயகாந்த்தின் மனைவி பிரேமலதா மற்றும் சுதீஷ் ஆகியோரை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு இரங்கல் தெரிவித்துள்ளார். தான் துபாயில் இருப்பதால் அஞ்சலி செலுத்த வர முடியவில்லை என அவர் கூறியுள்ளார்.
இந்நிலையில் நடிகர் மீசை ராஜேந்திரன் அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது, கேப்டன் இறந்த அன்று நடிகர் அஜித் துபாயிலிருந்து வேறு ஒரு நாட்டிற்கு சென்றுள்ளார். அதனால் தான் அவரால் விஜயகாந்த் மறைவிற்கு வர முடியவில்லை. இருந்தாலும் இந்தியா வந்தவுடன் அஜித் முதல் வேலையாக விஜயகாந்த் நினைவிடத்திற்கு தான் சென்று பார்ப்பார். அப்படித்தான் எங்களுக்கு தகவல் வந்திருக்கிறது. கண்டிப்பாக அவர் வருவார் என கூறியுள்ளார்.