கர்நாடக மாநிலம் பெலகாவி அருகே, கல்லூரித் தேர்வு எழுதிவிட்டு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக்கொண்டிருந்த மாணவர் ஒருவரின் கழுத்தை மாஞ்சா நூல் அறுத்ததில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். மகாந்தேஷ் நகரைச் சேர்ந்த துருவ சந்தோஷ் கார்ஜனகி என்ற 17 வயது இளைஞரே இந்தச் சோகமான சம்பவத்தில் பலியானவர் ஆவார். இவர் அப்பகுதியில் உள்ள ஒரு ஐ.டி.ஐ கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
சம்பவத்தன்று தனது தேர்வை முடித்துவிட்டு, பெங்களூரு-புனே தேசிய நெடுஞ்சாலை வழியாக துருவ சந்தோஷ் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக காற்றில் பறந்து வந்த மாஞ்சா நூல் அவரது கழுத்தில் ஆழமாகச் சிக்கி அறுத்ததால், அவர் வாகனத்திலிருந்து நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதனால் ஏற்பட்ட கடுமையான ரத்தப்போக்கு காரணமாக, அந்த மாணவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். பகலில் கல்லூரியிலும், இரவு நேரத்தில் வேலைக்கும் சென்று தனது குடும்பத்தைக் கவனித்து வந்த இந்த மாணவரின் அகால மரணம் அவரது குடும்பத்தினரைக் கண்ணீரில் மூழ்கடித்துள்ளது.
இந்தக் கொடூர விபத்தைக் கண்ட மற்ற வாகன ஓட்டிகள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். பெலகாவி மாநகராட்சிப் பகுதியில் உயிரைப் பறிக்கும் ஆபத்தான மாஞ்சா நூல்களை விற்க ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடையை மீறி மாஞ்சா நூலை விற்பனை செய்யும் வியாபாரிகளைக் கண்டறிந்து, அவர்கள் மீது மிகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பெலகாவி மாநகராட்சி கமிஷனர் ப்ரீத்தி கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதற்காக மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட அனைத்துக் கடைகளிலும் அதிகாரிகள் தீவிர சோதனை நடத்துவார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
