உச்சகட்ட கொடூரம்… புர்கா அணியாமல் சென்ற மனைவி, மகள்களை கொலை செய்து வீட்டுக்குள்ளேயே புதைத்த கணவன்… போலீசையே அதிர வைத்த பயங்கரம்…!

By Nanthini on மார்கழி 19, 2025

Spread the love

உத்தரப்பிரதேசம் மாநிலம் சமெலியை சேர்ந்த பாரூக் என்பவருடைய மனைவி தாஹிரா. இவர்களுக்கு 14 வயதில் ஷாரின் என்ற மகளும், ஆறு வயதில் அப்ரின் என்ற மகளும் இருந்தனர். தாஹிரா ஒரு இடத்திற்கு வேலைக்கு சென்று வருவதை வழக்கமாகக் கொண்டிருந்த நிலையில் சில நாட்களாக தாஹிராவோ அவருடைய மகள்களோ வீட்டைவிட்டு வெளியே வரவில்லை. அவர்களுடைய நடமாட்டம் இல்லாததால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் ஊர் தலைவருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே கிராமத்து தலைவர் தங்களுடைய கிராமத்தில் வசித்து வந்த பெண் உள்ளிட்ட அவருடைய இரண்டு மகள்களை காணவில்லை என்றும் கணவர் மீது சந்தேகம் இருப்பதாகவும் போலீசில் புகார் அளித்தார்.

இதனை தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், தனது பேச்சைக் கேட்காமல் நடந்த காரணத்தால் மனைவியை கொலை செய்ததாக பாரூக் தெரிவித்துள்ளார். வேலைக்கு செல்லும்போது புர்கா அணிய பலமுறை அறிவுறுத்தியும் கேட்காமல் சண்டையிட்டதால் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்ததாக தெரிவித்தார். அதன் மீது மனைவி மீதான வெறுப்பு காரணமாக இரண்டு மகள்களையும் அதே துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்ததாகவும் அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

   

மனைவி மற்றும் இரண்டு மகள்களின் சடலங்களை வீட்டுக்குள்ளேயே குழி தோண்டி புதைத்திருப்பதாகவும் அவர் கூறி போலீசாரை அதிர வைத்தார். உடனே அவருடைய வீட்டுக்கு சென்ற போலீசார் மூன்று பேரின் உடல்களையும் தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தற்போது இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.