தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சரவண பொய்கை தெருவைச் சேர்ந்த சலவைத் தொழிலாளி சரவணன் (50). அதே பகுதியைச் சேர்ந்த பிச்சுமணி (25) என்பவருக்கும் ஊர் நிர்வாகி மணி என்பவருக்கும் இடையே கடந்த ஐந்து மாதங்களாகப் பிரச்சினை இருந்து வந்தது. இதில் மணிக்கு ஆதரவாக சரவணன் செயல்பட்டதால் பிச்சுமணிக்கு அவர் மீது முன்விரோதம் ஏற்பட்டது.
இந்நிலையில், இன்று கடை முடிந்து வீட்டிற்குச் சென்றுகொண்டிருந்த சரவணனைப் பின்தொடர்ந்து வந்த பிச்சுமணி, அரிவாளால் அவரது தலையில் வெட்டினார். பலத்த காயமடைந்த சரவணன், தற்காப்பிற்காகப் பிச்சுமணியைத் தள்ளிவிட்டுத் தப்பிக்க முயன்றார். அப்போது நிலைதடுமாறி கீழே விழுந்த பிச்சுமணியும் மயக்கமடைந்தார்.
தகவலறிந்து வந்த திருச்செந்தூர் தாலுகா போலீசார், காயமடைந்த சரவணன் மற்றும் மயங்கிய பிச்சுமணி ஆகிய இருவரையும் மீட்டு திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட அரிவாளைத் தேடி தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
