தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் மகேஷ் பாபு. குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். முதல் முதலில் ராஜா குமாருடு என்ற திரைப்படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். அதன் பிறகு மகேஷ் பாபு நடிப்பில் ரிலீசான முராரி, ஒக்கடு, அத்தடு, போக்கிரி ஆகிய திரைப்படங்கள் சூப்பர் ஹிட் ஆனது. மகேஷ் பாபு பிரின்ஸ் ஆப் டோலிவுட் என ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படுகிறார்.
இவர் 40-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். ஒரு சில படங்கள் மூலம் தயாரிப்பாளராகவும் அறிமுகமானார். முன்னணி நடிகர்களான அமிதாப்பச்சன், சல்மான் கான், சோனு சூட், அக்ஷய் குமார், ஷாருக்கான் உள்ளிட்ட நடிகர்கள் சமூக நலன்களுக்காக நன்கொடை கொடுக்கின்றனர். சல்மான் கான் பீயிங் ஹியூமன் என்ற அமைப்பு மூலம் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான உதவி செய்கிறார்.
நடிகர் சோனு சூட் கொரோனா காலகட்டத்திற்கு பிறகு தொடர்ந்து மக்களுக்கு உதவி செய்து வருகிறார். அந்த வகையில் நடிகர் மகேஷ்பாபுவும் வருடத்திற்கு 25 முதல் 30 கோடி ரூபாய் வரை ஏழைகளுக்காக செலவிடுகிறார். பல்வேறு தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் மகேஷ் பாபு இணைந்து உதவி செய்து வருகிறார். தற்போது ரெயின்போ குழந்தைகள் மருத்துவமனையை நடத்தி வருகிறார்.
அதன் மூலம் ஏழை எளிய குழந்தைகளுக்கு இலவசமாக சிகிச்சை அளிக்க உதவி செய்கிறார். இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு இலவசமாக இதய அறுவை சிகிச்சை செய்ய உதவி செய்துள்ளார். மேலும் தனது மாநிலத்தில் உள்ள இரண்டு கிராமங்களை தத்தெடுத்து மின்சாரம், சாலைகள், பள்ளிகள், சுகாதார வசதிகள் உள்ளிட்ட அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளையும் செய்து கொடுத்துள்ளார்.