தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் பொங்கல் பண்டிகையின் போது அரசு சார்பில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு வழங்கப்படுவது வழக்கம். அதன்படி இந்த வருடம் சட்டமன்றத் தேர்தலும் நெருங்கும் சூழலில் பொங்கல் பண்டிகையை அனைவரும் மகிழ்ச்சியாக கொண்டாட ஏதுவாக பொங்கல் பரிசு தொகையாக 3000 ரூபாய், ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு கரும்பு, இலவச வேஷ்டி சேலை ஆகியவை வழங்கப்படும் என அரசு அறிவித்திருந்தது.
இதனைத் தொடர்ந்து பொங்கல் பரிசு வழங்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ள நிலையில் இன்று முதல் தமிழக முழுவதும் அனைத்து ரேஷன் கடைகளிலும் பொங்கல் பரிசு வழங்கப்படுகிறது. இதன் மூலம் ஜனவரியில் பொங்கல் பரிசு தொகையாக 3000 ரூபாய், மகளிர் உரிமைத்தொகை தவணையாக 1000 ரூபாய் என மொத்தம் ரூ.4000 பல கோடி குடும்பங்களுக்கு கிடைக்க உள்ளது. வழக்கமாக 15 ஆம் தேதி ஆயிரம் ரூபாய் வங்கி கணக்கில் டெபாசிட் செய்யப்படும் நிலையில் பொங்கலை முன்னிட்டு வருகின்ற ஜனவரி 12 அல்லது 13 ஆகிய தேதியே வரவு வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் குடும்பத் தலைவிகள் அனைவரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.
