Connect with us

‘பெரிய ஆளுங்களே தடுமாறாங்க… சின்ன பையன் எப்படி எழுதுவான்’- பட்டுக்கோட்டைய உதாசினப்படுத்திய MSV- கடைசியில் கண்ணீர் விட்ட கதை!

CINEMA

‘பெரிய ஆளுங்களே தடுமாறாங்க… சின்ன பையன் எப்படி எழுதுவான்’- பட்டுக்கோட்டைய உதாசினப்படுத்திய MSV- கடைசியில் கண்ணீர் விட்ட கதை!

 

காலத்தால் அழியாத பல தத்துவ பாடல்களை நமக்கு தந்தவர் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம். சிறந்த தமிழ் அறிஞர், சீர்த்திருத்தக் கருத்துகளை வலியுறுத்தி பாடியது தான் இவருடைய சிறப்பு. 19 வயதிலேயே கவி புனைவதில் அதிக ஆர்வம் காட்டியவர், உணர்ச்சிகளை தனது கவிதையில் கொட்டியவர். திரையுலகில் பாட்டாளி மக்களின் ஆசை கனவுகளையும், ஆவேசத்தையும், பாடல்களாக வடித்தவர். திரையுலகில் 180 பாடல்களையே எழுதினாலும், ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகமாக அமைந்தவை.

எம் ஜி ஆருக்கு கண்ணதாசன் மற்றும் வாலிக்கு முன்பாக ஆஸ்தான பாடல் ஆசிரியராக விளங்கியவர் பட்டுகோட்டையார்தான். ஆனால் தன்னுடைய 29 ஆவது வயதிலேயே அவர் எதிர்பாராத விதமாக மரணம் அடைந்ததால் அவரின் சினிமா வாழ்க்கை குறுகிய காலத்தில் முடிந்தது.

   

சினிமா ஆசையில் சென்னை வந்த பட்டுக்கோட்டைக்கு முதலில் வாய்ப்புகள் எளிதில் கிடைக்கவில்லை. இதனால் அவர் சிறிதுகாலம் வறுமையில் வாடியுள்ளார். அப்போது அவருக்கு ஒரு படத்தில் பாடல் எழுதும் வாய்ப்பு வந்துள்ளது. அந்த படம்தான் எம் எஸ் விஸ்வநாதன் இசையமைப்பில் மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த ‘பாசவலை’ திரைப்படம்.

அந்த படத்தின் ஒரு முக்கியமான சூழலுக்கு எம் எஸ் வி கஷ்டப்பட்டு ஒரு ட்யூனைப் போட்டுள்ளார். அந்த ட்யூனுக்கு அப்போது முன்னணி பாடல் ஆசிரியர்களாக இருந்த சிலரை எழுதவைத்துள்ளார். ஆனால் யாரின் வரிகளும் ட்யூனுக்கு செட்டாகவில்லையாம். அப்போது அங்கிருந்த சுலைமான் என்பவர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பற்றி சொல்லி, அவரை எழுத வைக்கலாமா எனக் கேட்டுள்ளார்.

அதற்கு எம் எஸ் வி “பெரிய ஜாம்பவான்களே தடுமாறாங்க. அவன் சின்னப்பையன். அவன் எப்படி இந்த பாட்ட எழுத முடியும்.” எனக் கோபத்தில் கத்தியுள்ளார். ஆனாலும் பாடல்கள் அமையாத நிலையில் சுலைமான் மீண்டும் ஒருமுறை அவரிடம் வேண்டுகோள் வைத்துள்ளார். ஒரு கட்டத்தில் இறங்கி வந்த எம் எஸ் வி ‘எழுத சொல்லுங்க’ எனக் கூறியுள்ளார்.

பட்டுக்கோட்டையும் சூழலைக் கேட்டு வரிகளை எழுதியுள்ளார். அப்படி அவர் எழுதிக் கொடுத்த வரிகளை நம்பிக்கை இல்லாமல் படித்துப் பார்த்த எம் எஸ் வி அதிர்ச்சியில் உறைந்து போய், கண்ணீரே விட்டுவிட்டாராம். அப்படி கணக்கச்சிதமாக சூழலுக்கும் பொருந்தி மெட்டுக்கும் பொருந்தி வந்ததாம். அப்படி பட்டுக்கோட்டை எழுதிய பாடல்தான் இன்றளவும் அழியாப் புகழ் பெற்றுள்ள “உனக்கும் சொந்தம் எனக்கும் சொந்தம் உலகத்தற்கு எதுதான் சொந்தமடா” என்ற பாடல்.

Continue Reading
To Top