CINEMA
விஸ்வநாதன் ராமமூர்த்தி கூட்டணி கடைசியாக இணைந்து பணியாற்றிய படம் என்ன தெரியுமா?
தமிழ் சினிமாவில் எம் ஜி ஆர் மற்றும் சிவாஜி என இருவரும் கோலோச்சிய 60 கள் மற்றும் 70 களில் முன்னணிப் இசையமைப்பாளராக வலம் வந்தவர் எம் எஸ் விஸ்வநாதன். இருவரின் படங்களுக்கும் முத்து முத்தான பாடல்களைக் கொடுத்த அவர் 80 களின் இறுதிவரை இசையமைத்தார். தன்னுடைய கேரியரில் ஒட்டுமொத்தமாக 1000 படங்களை நெருங்கி இசையமைத்துள்ளார்.
ஆனால் ஆரம்ப காலத்தில் இவர் இன்னொரு முன்னணி இசையமைப்பாளரான ராமமூர்த்தியோடுதான் இணைந்து பணியாற்றினார். இருவரும் பணம் என்ற படத்தின் மூலம் இணைந்து பணியாற்றத் தொடங்கினார்கள். இந்த வெற்றிக்கூட்டணி 10 ஆண்டுகளுக்கு மேல் இணைந்து பணியாற்றியது.
இதில் விஸ்வநாதன் மெட்டமைப்பது பாடலைக் கேட்டு வாங்குவது போன்ற பணிகளைப் பார்த்துக்கொண்டால், ராமமூர்த்தி வாத்திய கோர்வை மற்றும் ஆர்க்கெஸ்ட்ரா ஆகிய பணிகளைப் பார்த்துக் கொள்வார். இப்படி வெற்றிகரமாக சென்று கொண்டிருந்த கூட்டணி ஒரு கட்டத்தில் பிரிந்தது. இருவரும் பிரிந்த பின்னர் விஸ்வநாதன் பிஸியான இசையமைப்பாளராக வலம் வந்தார். ராமமூர்த்திக்கு அந்தளவுக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
இப்படி இவர்கள் பிரிந்தாலும் ஒருவர் மேல் ஒருவர் அளவற்ற மதிப்பும் பாசமும் கொண்டிருந்தனர். பிரிந்ததற்குப் பிறகு பல ஆண்டுகள் கழித்து இவர்கள் இருவரும் ஒரே ஒரு படத்தில் மட்டும் இணைந்து பணியாற்றினார்கள். அது சத்யராஜ் நடித்த எங்கிருந்தோ வந்தான் என்ற திரைப்படம்தான்.
எங்கிருந்தோ வந்தான் திரைப்படம் சத்யராஜ், ரோஜா ஆகியோர் நடிப்பில் சந்தானபாரதி இயக்கத்தில் 1995 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ஆகும். மலையாளத்தில் வெளியான சித்ரம் என்ற படத்தின் ரீமேக்கான இதில் எம் எஸ் விஸ்வநாதன் மற்றும் ராமமூர்த்தி ஆகிய இருவரும் இணைந்து பணியாற்றினார்கள்.