தமிழ் சினிமாவில் கமர்ஷியல் சினிமாவின் உச்சமாக அமைந்தது ரஜினிகாந்த் நடிப்பில் சுரேஷ் கிருஷ்ணா இயக்கிய பாட்ஷா திரைப்படம். 90 களில் ரஜினியின் மார்க்கெட் புதிய உச்சத்தைத் தொட்டது. அதில் மிகப்பெரிய பிளாக்பஸ்டராக அமைந்தது பாட்ஷா திரைப்படம். அந்த படத்தின் வெற்றியால் அதே திரைக்கதை பார்மட்டில் 10க்கும் மேற்பட்ட படங்கள் வெவ்வேறு நடிகர்களை வைத்து உருவாகின.
இந்த படத்தைத் தயாரித்தது சத்யா மூவிஸ் ஆர் எம் வீரப்பன். இந்த படம் பற்றி ஒரு முறை பேசும் போது இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா பலரும் அறியாத ஒரு தகவலைப் பகிர்ந்தார். அதில் “பாட்ஷாவுக்கு முன்பு வரை ரஜினி சாருக்கு தெலுங்கில் மார்க்கெட்டே இல்லை. அவர் படங்கள் தெலுங்கில் ஓடவே ஓடாது. அதனால் பாட்ஷா படத்தை குறைவான விலைக்குதான் விற்றார்கள். ஆனால் படம் சூப்பர் ஹிட்டானது. அதன் பிறகுதான் ரஜினி சாருக்கு நிலையான தெலுங்கு மார்க்கெட் உருவானது. எல்லா படங்களும் தெலுங்கில் டப் செய்யப்பட்டன” எனக் கூறியிருந்தார்.
பாட்ஷாவுக்கு பிறகு ரஜினி சினிமாவில் மட்டும் இல்லாமல், அரசியல் களத்திலும் சூப்பர் ஸ்டார் ஆனார். அப்போது நடந்த ஒரு தேர்தலில் ரஜினியின் ஆதரவால்தான் திமுக கூட்டணி வெற்றி பெற்றதாகக் கூட சொல்லப்பட்டது. அந்த அளவுக்கு தாக்கம் ஏற்படுத்திய பாட்ஷா படத்தில் பல குறைகள் உள்ளன. ஆனால் அதையெல்லாம் கண்டுகொள்ள விடாத அளவுக்கு ரஜினியின் மாஸும் பரபரப்பான திரைக்கதையும் அமைந்தது.
இப்படிதான் படத்தில் உள்ள லாஜிக் குறைபாட்டை படம் பார்த்தவுடன் இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் ரஜினியிடம் கூறியுள்ளார். அது என்னவென்றால் “படத்தின் இரண்டாம் பாதியில் வில்லனான ரகுவரனுக்கு வயது ஆகி கிழவனாக வருகிறார். ஆனால் நீங்கள் அப்படியே இருக்கிறீர்கள்” என்று கூறியுள்ளார். அதைக் கேட்ட ரஜினிகாந்த் “படத்துக்குள்ள இருக்குற மாஸ்ல அதெல்லாம் தெரியாமப் போகிடும்” என சொன்னாராம். ரஜினி சொன்னது போலவே அதையெல்லாம் யாரும் கேள்வியே கேட்கவில்லை. படம் ப்ளாக்பஸ்டர் ஹிட் ஆனது வரலாறு.