தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் கருணாஸ். இவர் நடிகர் மட்டுமல்ல .ஒரு இசையமைப்பாளரும் கூட. அது மட்டும் இல்லாமல் இவர் தமிழக அரசியலிலும் களமிறங்கி கலக்கியவர். சூர்யா நடிப்பில் வெளிவந்த ‘நந்தா’ படத்தில் ‘லொடுக்கு பாண்டி’ என்ற கதாபாத்திரத்தின் மூலம் தான் கருணாஸ் சினிமா உலகில் அறிமுகமானார். இத்திரைப்படத்தில் அவரது கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது .
அதன் பின்னர் விஜய், அஜித், தனுஷ் என பல முன்னணி நடிகர்களோடு நடித்து தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவரானார். இதைத் தொடர்ந்து வில்லன், புதிய கீதை ,திருமலை, குத்து, பிதாமகன், திருடா திருடி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துள்ளார். மேலும் திண்டுக்கல் சாரதி, அம்பாசமுத்திரம் அம்பானி, சாந்த மாமா போன்ற திரைப்படங்களில் ஹீரோவாகவும் நடித்துள்ளார். தற்பொழுது இவர் பல்வேறு திரைப்படங்களில் கமிட்டாகி குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.
கருணாஸ் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமாவதற்கு முன்பாக கானா பாடல்களை பாடி வந்தார். அதன் மூலமே அவருக்கு சினிமா தொடர்புகள் கிடைத்தன. அப்படி பாட்டு பாடி வந்த போது அவருக்கு சினிமாவில் பாட வாய்ப்புகள் கிடைத்துள்ளன. அப்படிதான் நாட்டாம படத்தில் இடம்பெற்ற ‘நாட்டாம பாதம் பட்டா” என்ற பாடலை பாடும் வாய்ப்பை இசையமைப்பாளர் சிற்பி அவருக்கு வழங்கியுள்ளார்.
கருணாஸும் அந்த பாடலைப் பாடியுள்ளார். ஆனால் அப்போது கருணாஸுக்கு கமர்ஷியல் மதிப்பு இல்லை என்பதால் அவரைத் தூக்கிவிட்டு மலேசியா வாசுதேவனைப் பாடவைத்துள்ளார்கள். ஒருவேளை அந்த பாடல் கருணாஸ் குரலில் வெளியாகி இருந்தால் அவர் பாடகராகவே சினிமா உலகில் தொடர்ந்திருக்கவும் வாய்ப்புள்ளது. இந்த தகவலை கருணாஸே ஒரு மேடையில் ஆதங்கத்தோடு பேசியுள்ளார்.