தமிழ் சினிமாவில் பாடல்களின் பொற்காலமாக விளங்கியது 50 களும் 60 களும்தான். அப்போது புகழின் உச்சத்தில் இருந்தவர்கள் உடுமலை நாராயணகவி, மருதகாசி, கண்ணதாசன் போன்றவர்கள். இவர்கள் அனைவரும் படங்களுக்கு பாடல்கள் மட்டும் எழுதாமல் கதை வசனமும் எழுதியுள்ளார்.
50 களில் முதலில் படங்களுக்கு கதை வசனம் மட்டும் எழுதிக் கொடுத்துக் கொண்டிருந்த கண்ணதாசன் 50 களின் இறுதியில் படங்களுக்கு பாடல்கள் எழுத ஆரம்பித்தார். அவரின் பாடல்கள் அடுத்தடுத்து ஹிட்டானதால் அவர் பாடல் எழுதுவதில் அதிக ஆர்வம் செலுத்த தொடங்கினார்.
அவரின் ஆரம்ப கால பாடல்கள் பெரும்பாலும் எம் ஜி ஆருக்காக எழுதப்பட்டவை. அந்த பாடல்களில் கவிரசம் சொட்ட சொட்ட எழுதி ரசிகர்களை தேனில் விழுந்த வண்டை போல கிறங்கடித்திருப்பார். அப்படி ஒரு பாடலைப் பற்றியும் அதில் கண்ணதாசன் பயன்படுத்தியுள்ள ஒரு கவித்துவமான நுட்பத்தையும் பார்க்கலாம்.
எம் ஜி ஆர், தேவிகா நடித்து ஏ எஸ் ஏ சாமி இயக்கத்தில் உருவான திரைப்படம் ‘ஆனந்த ஜோதி’. இந்த படத்துக்கு எம் எஸ் வி மற்றும் ராமமூர்த்தி இசையில் கண்ணதாசன் எழுதிய காதல் டூயட்தான் ‘பனியில்லாத மார்கழியா’. இந்த பாடல் இன்றுவரை கேட்டு ரசிக்கப்படும் ஒரு மெல்லிசை பாடல்.
இந்த பாடலில் கதாநாயகனும் கதாநாயகியும் மாறி மாறி காதலை வெளிப்படுத்துவது போல பாடுவர். அவர்கள் நேரடியாக பாடுவது போல இல்லாமல் கேள்விகளை கேட்டுக்கொள்வது போல பாடல் வரிகளை உருவாக்கி இருப்பார் கண்ணதாசன. அதாவது பனியில்லாத மார்கழியா என்ற கேள்வியிலேயே ‘மார்கழி என்றால் பனி இருக்கும்தானே’ என்ற பதிலும் இடம்பெற்றிருக்கும்.

இப்படி பாடல் முழுவதும் கேள்விகள் போலவும் அதற்குள்ளாகவே பதில்கள் இருப்பது போலவும் எழுதி இறுதியில் இவையணைத்தும் ‘பருவம் செய்யும் கதையல்லவா’ என முடித்திருப்பார். இந்த பாடலை பற்றி தன்னுடைய யுடியூப் சேனலில் சிலாகித்துள்ள ஆலங்குடி வெள்ளைச்சாமி இதுபோன்ற யுக்தியில் தமிழில் பாடல்களே வந்ததில்லை எனப் பேசியுள்ளார்.
பாடல் வரிகள்:-
பல்லவி
பனி இல்லாத மார்கழியா
படை இல்லாத மன்னவரா
பனி இல்லாத மார்கழியா
படை இல்லாத மன்னவரா
இனிப்பில்லாத முக்கனியா
இசையில்லாத முத்தமிழா
இனிப்பில்லாத முக்கனியா
இசையில்லாத முத்தமிழா
பனி இல்லாத மார்கழியா
படை இல்லாத மன்னவரா…
சரணம் 1
அழகில்லாத ஓவியமா
ஆசை இல்லாத பெண் மனமா
அழகில்லாத ஓவியமா
ஆசை இல்லாத பெண் மனமா
மழை இல்லாத மாநிலமா
மலரில்லாத பூங்கொடியா
மலரில்லாத பூங்கொடியா
சரணம் 2
தலைவனில்லாத காவியமா
தலைவியில்லாத காரியமா
தலைவனில்லாத காவியமா
தலைவியில்லாத காரியமா
கலையில்லாத நாடகமா
காதல் இல்லாத வாலிபமா
காதல் இல்லாத வாலிபமா
சரணம் 3
நிலையில்லாமல் ஓடுவதும்
நினைவில்லாமல் பாடுவதும்
நிலையில்லாமல் ஓடுவதும்
நினைவில்லாமல் பாடுவதும்
பகைவர் போலே பேசுவதும்
பருவம் செய்யும் கதையல்லவா
பருவம் செய்யும் கதையல்லவா
