தமிழ் சினிமாவில் தன்னுடைய வித்தியாசமான உடல்மொழி மற்றும் நகைச்சுவை தெறிக்கும் வசனங்கள் மூலமாகக் கலக்கியவர் நாகேஷ். 20 ஆண்டுகளுக்கு மேலாக இவர் தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்தார். அவரை தமிழ் சினிமாவின் சார்லி சாப்ளின் என்றும் சொல்வர். கவுண்டமணி வருகைக்குப் பிறகும் பல படங்களில் நகைச்சுவை, வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்தார்.
அவர் தன்னுடைய மார்க்கெட்டின் உச்சத்தில் இருந்த போது கிட்டத்தட்ட அனைத்து தமிழ் படங்களிலும் நடித்தார். ஒரு நாளைக்கு ஷிஃப்ட் கணக்கில் ஐந்து படங்களில் கூட நடித்துள்ளார். இதனால் எந்த பட ஷூட்டிங்குக்கும் அவரால் சொன்ன நேரத்தில் செல்ல முடியாதாம். அதனால் அவர் வர தாமதமானால் எம் ஜி ஆர், சிவாஜி கூட அவருக்காக காத்திருக்க வேண்டிய சூழல் உருவானதாம்.
அதன் பின்னர் தன்னுடைய மார்க்கெட் போனபோதும், குணச்சித்திர மற்றும் வில்லன் நடிப்புக்கு இறங்கிவந்தார். ஒவ்வொரு காலகட்டத்துக்கும் ஏற்ப தன்னை அப்டேட் செய்துகொண்டு தன்னுடைய மரணம் வரை நடித்தார். கடைசியாக அவர் நடித்த படம் கமல்ஹாசனின் தசாவதாரம் படம்தான். தமிழ் சினிமாவில் கமல், அளவுக்கு நாகேஷின் வெறித்தனமான ரசிகர்கள் யாரும் இருக்க முடியாது.
கமலின் படங்களில் மட்டும் நாகேஷின் கதாபாத்திரமும், அவரின் நடிப்பும் ஏதோவொரு தனித்துவத்தோடு இருக்கும். இந்நிலையில் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கமல, நாகேஷின் நகைச்சுவை உணர்வு குறித்து பேசிய வீடியோ ஒன்று வைரல் ஆகி வருகிறது.
அதில் “கிரேஸி மோகனும், நாகேஷும் ஒரு மோசமான நாடகத்துக்கு போய் மாட்டிக் கொண்டுள்ளார்கள். சரி எப்படியாவது நழுவி விடலாம் வெற்றிலை எச்சில் துப்ப செல்வது போல எழுந்துள்ளார். அப்போது அவரின் கையைப் பிடித்த நாகேஷ் ‘எங்கே போகிறாய்’ எனக் கேட்டுள்ளார். அதற்கு சைகையிலேயே வெற்றிலை எச்சில் துப்பிவிட்டு வருகிறேன் என கிரேஸி மோகன் கூறியுள்ளார்.
அதற்கு நாகேஷோ ‘ஏன் வெளியே போய் துப்புற. இங்கயே ஸ்டேஜ பாத்து துப்பு’ என சொல்லியுள்ளார். இதை என்னிடம் சொல்லி சொல்லி சிரித்தார் கிரேஸி மோகன்” என அதில் பகிர்ந்துள்ளார்.