கே.பாலச்சந்தர் இயக்கத்தில் கடந்த 1973-ஆம் ஆண்டு அரங்கேற்றம் படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் சிவக்குமார், பிரமிளா, கமல்ஹாசன், எம்.என் ராஜம் உள்ளிட்டார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தனர். இந்த படத்தில் தான் கமல்ஹாசன் முதல் முதலில் வாலிபராக அறிமுகமானார். முன்னதாக குழந்தை நட்சத்திரமாக படங்களில் நடித்தார். ஒருமுறை கே.பாலச்சந்தர் கமல்ஹாசனை அழைத்தார். அப்போது தன்னை உதவி இயக்குனராக தான் சேர்த்துக் கொள்ளப் போகிறார் என நினைத்து கமல்ஹாசன் சந்தோஷமாக வந்தார்.
வந்தவுடன் கே.பாலச்சந்தர் அரங்கேற்றம் படத்தில் நடிக்குமாறு கமல்ஹாசனிடம் கூறியுள்ளார். உதவி இயக்குனராக வேண்டும் என்ற ஆசையோடு வந்த கமல்ஹாசனுக்கு அது அதிர்ச்சியாக இருந்தது. ஆனால் அந்த வாய்ப்பை விட்டு விடக்கூடாது என்பதற்காக அரங்கேற்றம் படத்தில் நடித்தார். அவரது நடிப்பு அருமையாக இருந்தது. கே.பாலச்சந்தரை பொறுத்தவரை அவர் கூறுவதை அப்படியே நடித்துக் காட்டும் நடிகர்கள் குறைவு தான். அப்படி இருக்க அவர் கூறாத முக பாவனைகளையும் கமலஹாசன் சிறப்பாக நடித்து காண்பித்தார்.
அதனை பார்த்து கே.பாலச்சந்தர் அசந்து போனார். படம் ரிலீஸ் ஆகி ஏராளமான பத்திரிகைகள் படத்தை விமர்சித்தது. முக்கியமாக குமுதம் நாளிதழ் சுமார் 2 வாரங்களுக்கு அரங்கேற்றம் படத்தை விமர்சனம் செய்தது. படத்தில் கமல்ஹாசனின் நடிப்பு அருமையாக இருந்தது. உடனே கே.பாலச்சந்தர் தனது நண்பரான ஆனந்துவிடம் கமல்ஹாசன் மிகப்பெரிய ஆளாய் வருவார் அவரிடம் நல்ல திறமைகள் இருக்கிறது என கூறியுள்ளார்.
அதிலிருந்து சில நாட்கள் கழித்து கமல்ஹாசன் கே.பாலச்சந்தரை பார்க்க வந்துள்ளார். அப்போது கையில் ஒரு காசோலையும் வைத்திருந்தார். அரங்கேற்றம் படத்தின் தயாரிப்பு நிறுவனம் சுமார் 34 நாட்கள் நடித்த கமல்ஹாசனுக்கு சம்பளமாக 500 ரூபாய் மட்டுமே கொடுத்தது. 34 நாட்கள் நடித்ததற்கு 500 ரூபாய் தான் சம்பளமா? இதை நான் மறுபடியும் தயாரிப்பு நிறுவனத்திடம் திருப்பி கொடுத்து விடவா என கமல்ஹாசன் கோபமாக கேட்டுள்ளார்.
உடனே கே. பாலச்சந்தர் இது திரைத்துறையில் உனது தொடக்கம் தான். நான் சொல்வதைக் கேட்டு அமைதியாக இரு. எனது அடுத்த படத்திலும் உன்னை நடிக்க வைக்கிறேன். இந்த காசோலையை அமைதியாக ஏற்றுக்கொள் என கூறியுள்ளார். அவர் கூறியதை கேட்டு கமலஹாசனும் ஒன்றும் சொல்லாமல் அந்த காசோலையை வைத்துக் கொண்டார். கே.பாலச்சந்தர் கூறியபடி அடுத்த படமான சொல்லத்தான் நினைக்கிறேன் படத்தில் கமல்ஹாசனை நடிக்க வைத்தது குறிப்பிடத்தக்கதாகும்.