தமிழ்நாடு வனத்துறையின் கீழ் இயங்கும் ‘தமிழ்நாடு வைல்டர்னஸ் எக்ஸ்பீரியன்சஸ் கார்ப்பரேஷன்’ நிறுவனத்தில் காலியாக உள்ள 8 பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில் நிர்வாக அதிகாரி, அசோசியேட் (தொழில்நுட்பம்), திட்ட ஒருங்கிணைப்பாளர், கணக்கு உதவியாளர், திட்ட உதவியாளர், இயற்கையியலாளர் மற்றும் டெஸ்டினேஷன் மேலாளர் ஆகிய பதவிகள் காலியாக உள்ளன. தேர்வு செய்யப்படுபவர்களுக்குப் பணி அனுபவம் மற்றும் பதவிக்கேற்ப மாதம் ரூ.20,000 முதல் ரூ.50,000 வரை சம்பளம் வழங்கப்படும். இப்பணிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் 30 முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
இந்தப் பணியிடங்களுக்கு எந்தவிதமான எழுத்துத் தேர்வோ அல்லது விண்ணப்பக் கட்டணமோ கிடையாது; பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு நேர்காணல் மூலமாக மட்டுமே தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். பி.காம், எம்பிஏ, சுற்றுலா மேலாண்மை மற்றும் அறிவியல் துறைகளில் இளங்கலை அல்லது முதுகலை பட்டம் முடித்த தகுதியான நபர்கள் இதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்யலாம். உரிய கல்வி மற்றும் அனுபவச் சான்றுகள், அடையாள அட்டை நகல்களுடன் வரும் ஆகஸ்ட் 9, 2026-க்குள் ஆன்லைன் வழியில் தவறாமல் விண்ணப்பித்து இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
