திருநெல்வேலி பொதிகை நகரைச் சேர்ந்த ஜஸ்டின் – ஜூலியட் தம்பதியினர், சென்னையில் வசிக்கும் தங்கள் மகனைக் காண்பதற்காக தனியார் ஆம்னி பேருந்து ஒன்றில் பயணம் மேற்கொண்டனர். கயத்தாறு சுங்கச்சாவடியைத் தாண்டி கரிசல்குளம் அருகிலுள்ள ஒரு நெடுஞ்சாலை உணவகத்தில் இரவு உணவிற்காகப் பேருந்து நிறுத்தப்பட்டது. அப்போது, தங்களது இருக்கையிலேயே 40 சவரன் தங்க நகைகள் அடங்கிய கைப்பையை வைத்துவிட்டு இருவரும் சாப்பிடச் சென்றனர். உணவு முடிந்து திரும்பி வந்து பார்த்தபோது, அவர்கள் விட்டுச் சென்ற கைப்பை திருடப்பட்டிருப்பதைக் கண்டு பெரும் அதிர்ச்சியடைந்தனர்.
இந்தச் சம்பவம் குறித்து உடனடியாகப் பேருந்து ஓட்டுநரிடம் தெரிவிக்கப்பட்டது. அவர் சற்றும் தாமதிக்காமல் பேருந்தை அனைத்து பயணிகளுடன் கயத்தாறு காவல் நிலையத்திற்கு ஓட்டிச் சென்றார். அங்குப் பேருந்தில் இருந்த பயணிகளிடமும் அவர்களது உடைமைகளிலும் காவல்துறையினர் தீவிர சோதனை நடத்தினர். இருப்பினும் யாரிடமும் அந்த நகைகள் சிக்கவில்லை. இதனையடுத்து, பேருந்து நிறுத்தப்பட்டிருந்த உணவகத்தில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளைக் கைப்பற்றி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். பயணிகள் உணவருந்தச் சென்றதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் இந்தத் துணிகரத் திருட்டில் ஈடுபட்டிருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
சென்னைக்கும் தென் மாவட்டங்களுக்கும் இடையே தினமும் ஏராளமான ஆம்னி பேருந்துகள் இயக்கப்படும் நிலையில், உணவகங்களில் பேருந்துகள் நிற்கும் நேரத்தைக் குறிவைத்து இதுபோன்ற திருட்டு சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. கடந்த ஆண்டும் இதே உணவகம் அருகே நிறுத்தப்பட்டிருந்த பேருந்தில் பயணம் செய்த ஒருவரிடமிருந்து 10 லட்சம் ரூபாய் இதே பாணியில் கொள்ளையடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. எனவே, பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் அனைத்து தனியார் பேருந்துகளிலும், நெடுஞ்சாலை உணவகங்களிலும் கட்டாயமாகக் கண்காணிப்பு கேமராக்களைப் பொருத்த வேண்டும் எனப் பயணிகள் பலரும் வலுவான கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.
