பிரபல நடிகர் ஆன ஜெய்சங்கர் கடந்த 1965-ஆம் ஆண்டு ரிலீசான இரவும், பகலும் திரைப்படம் மூலமாக திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். இவர் 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். ஜெய்சங்கருக்கு தனி ரசிகர் பட்டாளமே இருந்தது. ரஜினிகாந்தின் முரட்டுக்காளை படத்தில் ஜெய்சங்கர் வில்லனாக புதிய பரிமாணத்தில் நடித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.
ஜெய்சங்கர் வில்லனாகவும் குணசித்திர கதாபாத்திரத்திலும் நடித்தார். ஜெய்சங்கரின் படங்கள் வெள்ளிக்கிழமை தோறும் அன்றைய காலகட்டத்தில் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும். எங்க வீட்டுப் பெண், குழந்தையும் தெய்வமும், வல்லவனுக்கு வல்லவன், காதல் படுத்தும் பாடு, பட்டணத்தில் பூதம், ராஜா வீட்டு பிள்ளை உள்ளிட்ட படங்களில் ஜெய்சங்கர் நடித்துள்ளார். ஒரு காலகட்டத்தில் ஜெய்சங்கர் தனது சினிமா மார்க்கெட்டை இழந்தார்.
அந்த சமயம் பிரபல தொழிலதிபர் ஒருவர் ஜெய்சங்கரை அணுகி உங்களை வைத்து படம் எடுக்க தயாராக இருக்கிறேன். நீங்கள் சம்மதித்தால் படம் எடுக்கலாம். பணத்தைப் பற்றி நீங்கள் கவலைப்படாதீர்கள் என கூறியுள்ளார். அவரிடம் ஜெய்சங்கர் வேண்டாம். நான் சொல்லும் போது படம் எடுக்கலாம். இப்போது சென்று வாருங்கள் என அவரை அனுப்பி விடுகிறார். இதுகுறித்து ஜெய்சங்கரிடம் கேட்டபோது என்னை வைத்து படம் எடுக்கும் அளவுக்கு அவரிடம் பணம் இருக்கிறது.
அவர் நல்ல தொழில் அதிபர் என்பது எனக்கு தெரியும். ஆனால் இப்போது எனது மார்க்கெட் குறைந்து விட்டது. இந்த நேரத்தில் அவருக்காக படம் நடித்துக் கொடுத்தால் என் படத்தை யார் வாங்குவார்கள். அவருக்கு நஷ்டம் தான் ஏற்படும். நமக்கு பணம் வருகிறது என்பதற்காக நஷ்டம் ஏற்படும் படத்தில் நடிப்பது எந்த வகையில் நியாயம் என ஜெய்சங்கர் கூறியுள்ளார். அந்த காலகட்டத்தில் பணத்திற்காக ஏதோ ஒரு படத்தில் நடித்து கொடுக்காமல் தயாரிப்பாளர் நஷ்டம் அடையக் கூடாது என ஜெய்சங்கர் நினைத்துள்ளார்.