சென்னை தியாகராய நகரில் நடைபெற்ற நிகழ்வில், புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் ஜெகன் மூர்த்தி 2026-2027 ஆம் ஆண்டிற்கான ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான நிழல் நிதிநிலை அறிக்கையை வெளியிட்டார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “கடந்த திமுக அரசு ஆதிதிராவிடர் நலத்துறைக்கு ஒதுக்கப்பட்ட நிதியை பிற துறை திட்டங்களுக்குத் திருப்பியதன் மூலமாக அம்மக்களுக்குப் பெரும் துரோகம் இழைத்தது; இதன் காரணமாகவே அவர்கள் ஆட்சியை இழக்க நேரிட்டது” என்று சாடினார். மேலும், தற்போதைய தமிழக வெற்றிக் கழக அரசு அந்தத் தவறைச் செய்யாமல், ஆதிதிராவிடர் துறைக்கு ஒதுக்கப்படும் நிதியை முழுமையாக அத்துறைக்கே பயன்படுத்த வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.
தமிழ்த்தாய் வாழ்த்து குறித்த சர்ச்சைக்குப் பதிலளித்த அவர், அரசு விழாக்களில் முதன்மையாகத் தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவதே முறையானது என்றும், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக விழாவில் அது மூன்றாவதாகப் பாடப்பட்டது முற்றிலும் ஏற்புடையதல்ல என்றும் சுட்டிக்காட்டினார். தொடர்ந்து பேசிய அவர், தங்களது கட்சியின் சார்பில் தயாரிக்கப்பட்ட நிழல் நிதிநிலை அறிக்கையை முதலமைச்சர் விஜய்யைச் சந்தித்து வழங்க முயற்சி எடுக்க உள்ளதாகத் தெரிவித்தார். அதேபோல், மேகதாது விவகாரத்தில் தமிழக அரசின் ஒப்புதலின்றி எந்த முடிவும் எடுக்க முடியாது என்பதால், அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என வலியுறுத்தினார்.
காவிரி விவகாரம் குறித்துப் பேசுகையில், கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி நடப்பதால் தமிழக காங்கிரஸ் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடத்தி உரிய தண்ணீரைப் பெற்றுத்தர வேண்டும் என்றும், தவறினால் தமிழக அமைச்சரவையில் உள்ள இரண்டு காங்கிரஸ் அமைச்சர்களும் தங்கள் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார். இறுதியாகக் கூட்டணிக் குறித்துப் பேசிய ஜெகன் மூர்த்தி, அதிமுகவுடனான கூட்டணி தேர்தலோடு முடிந்துவிட்டதாகவும், தற்போது தாங்கள் எந்தக் கூட்டணியிலும் இல்லை என்றும் தெளிவுபடுத்தினார். வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமைப்பது குறித்து தேர்தல் அறிவிக்கப்படும் போது தகுந்த முடிவெடுக்கப்படும் என்று கூறி முடித்தார்.
