தமிழ் சினிமாவில் தன்னிகரற்ற ஒரு ஆளுமை என்றால் கண்ணை மூடிக்கொண்டு இளையராஜாவின் பெயரை சொல்லலாம். இசையமைப்பாளராக அவர் அறிமுகமானதில் இருந்து இப்போது வரை அவர் செய்திருக்கும் சாதனைகள் உலக சினிமாவிலேயே எவரும் இதுவரை படைக்காத சாதனைகள்.
இப்போதும் தன்னுடைய 82 ஆவது வயதில் பிஸியாக பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இதுவரை அவர் 1500 படங்களுக்கு இசையமைத்துள்ளதாக சொல்லப்படுகிறது. தமிழ் சினிமாவில் பல ஜாம்பவான் இசையமைப்பாளர்கள் உருவாகியுள்ளார்கள். ஆனால் அவர்களுக்கும் இளையராஜாவுக்கும் இடையே உள்ள பெரிய வித்தியாசமே பின்னணி இசையில் இளையராஜாவுக்கு நிகர் அவர் மட்டுமே. அவரின் வருகைக்குப் பிறகே தமிழ் சினிமாவில் பின்னணி இசையை இயக்குனர்கள் உணர ஆரம்பித்தார்கள் என்றால் அது மிகையாகாது.
இளையராஜா உச்சத்தில் இருந்த போது அவருக்கு சரியான போட்டியாளர்களே இல்லை என்று சொல்லலாம். சந்திரபோஸ், டி ராஜேந்தர், மனோஜ் கியான் போன்றவர்கள் அவருக்கு பின் வந்து பிரபலம் ஆனாலும், அவருக்கு சரியான போட்டியாளர்களாக அவர்களில் யாராலும் வரமுடியவில்லை. அந்த அளவுக்கு உழைப்பைக் கொட்டியுள்ளார் இளையராஜா.
இந்நிலையில் தயாரிப்பாளரும் இளையராஜாவின் நெருங்கிய நண்பருமான கலைப்புலி தாணு, இளையராஜாவை தன்னுடைய படத்துக்கு ஒப்பந்தம் செய்யப் போனபோது நடந்த ஒரு சம்பவத்தை ஒரு நேர்காணலில் பகிர்ந்துள்ளார். அதில் “நான் அவரிடம் சென்று என் படத்துக்கு இசையமைக்க வேண்டும் எனக் கேட்டேன். நீதான் வேறு ஆட்களை வைத்து பண்ணுகிறாயே எனக் கேட்டார். நான் அதற்கு உங்களோடு படம் பண்ணவேண்டும் என ஆசைப்படுகிறேன் என சொன்னேன்.
அதைக் கேட்டு அவர் ஒரு பெரிய தொகையை சம்பளமாகக் கேட்டார். நான் அதைக் கேட்டு அதிர்ச்சியாகி ‘வழக்கமாக நீங்க வாங்குறத விட பல மடங்கு அதிகமாக சொல்றீங்களே?’ எனக் கேட்டேன். பொட்டி புடிக்க தெரியாதவனுக்கெல்லாம் ஒரு லட்சம் சம்பளம் கொடுக்குற… நான் கேக்கக் கூடாதா?” எனக் கேட்டார்” எனக் கூறியுள்ளார்.
இதில் அவர் பொட்டி புடிக்க தெரியாதவன் என்று சொன்னது இசையமைப்பாளர் டி ராஜேந்தரைதான் என ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஏனென்றால் டி ஆருக்கு இசை என்பது பட்டறிவுதான். அவருக்கு எந்த இசைக் கருவியையும் வாசிக்க தெரியாது. அதுமட்டுமில்லாமல் இளையராஜாவுக்கு போட்டியாக டி ஆரை பற்றி போஸ்டர்கள் எல்லாம் அடித்து தாணு விளம்பரப்படுத்தினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.