அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே பல மாதங்களாக நீடித்து வந்த கடுமையான போர் பதற்றமும் மோதல்களும் ஒரு வழியாக முடிவுக்கு வரும் சூழல் ஏற்பட்டுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே இறுதியாகவுள்ள இந்த முதலாம் கட்ட அமைதி ஒப்பந்தத்தின்படி, ஈரான் தனது கட்டுப்பாட்டில் உள்ள உலகப் புகழ்பெற்ற ‘ஹார்முஸ் ஜலசந்தியை’ மீண்டும் கப்பல் போக்குவரத்திற்காகத் திறக்க சம்மதித்துள்ளது. இதற்குப் பதிலாக, ஈரான் மீது அமெரிக்கா விதித்துள்ள கடுமையான பொருளாதாரத் தடைகளைத் தளர்த்த அமெரிக்க அதிகாரிகள் ஒப்புக்கொண்டுள்ளனர். சர்வதேச சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய இந்த இரண்டு முக்கிய நடவடிக்கைகளும் ஒரே நேரத்தில் நடைபெறும் எனத் தெரிகிறது.
உலகில் உற்பத்தி செய்யப்படும் கச்சா எண்ணெயில் பெரும் பகுதி இந்த ஹார்முஸ் ஜலசந்தி வழியாகவே மற்ற நாடுகளுக்குக் கொண்டு செல்லப்படுகிறது. போர் பதற்றம் காரணமாக இந்தப் போக்குவரத்துப் பாதை மூடப்பட்டிருந்ததால் உலகளவில் எரிசக்தி விநியோகம் முடங்கியிருந்தது. தற்போது இந்த ஒப்பந்தத்தின் மூலம் ஜலசந்தி மீண்டும் திறக்கப்படுவதால், சர்வதேச அளவில் எரிசக்தி போக்குவரத்து சீராவதுடன், கச்சா எண்ணெய் விலை குறைவதற்கும் சர்வதேச வர்த்தகம் தடையின்றி நடப்பதற்கும் வழிவகுக்கும். இருப்பினும், இந்த ஜலசந்தியில் வைக்கப்பட்டுள்ள கண்ணிவெடிகளை அகற்றுவது ஒரு சவாலான காரியமாக இருப்பதால், முதற்கட்டமாகப் போக்குவரத்து தொடங்கப்பட்டு, அடுத்த கட்டமாகவே கண்ணிவெடிகளை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்படும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இந்த ஒப்பந்தம் பல ஆண்டுகளாக அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளால் மோசமாகப் பாதிக்கப்பட்டிருந்த ஈரானுக்குப் பொருளாதார ரீதியாகப் பெரும் நிம்மதியைத் தரும் என்பதில் சந்தேகமில்லை. இதன் மூலம் அமெரிக்காவால் முடக்கி வைக்கப்பட்டிருந்த ஈரானின் பில்லியன் கணக்கான டாலர் சொத்துக்கள் விடுவிக்கப்படும். குறிப்பாக, ஈரான் தனது கச்சா எண்ணெய்யை மற்ற நாடுகளுக்கு தடையின்றி ஏற்றுமதி செய்ய வழிவகை ஏற்படும் என்பதால், அந்நாடு தனது பொருளாதார வீழ்ச்சியிலிருந்து மீண்டு வர இது ஒரு முக்கிய வாய்ப்பாக அமையவுள்ளது. இந்த ஒப்பந்தம் இன்று அல்லது அடுத்த சில நாட்களில் கையெழுத்தாகலாம் என்று இருநாட்டு தரப்பிலிருந்தும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதேநேரம், இந்த ஒப்பந்தம் கையெழுத்தாவதன் மூலம் அனைத்துப் பிரச்சினைகளும் உடனடியாக முடிந்துவிடாது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த முதலாம் கட்ட ஒப்பந்தத்தில் ஈரானின் செறிவூட்டப்பட்ட யூரேனியம் தொடர்பாக எந்தவொரு டீலும் இல்லை. ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு வரும் 60 நாட்களில், ஈரானின் அணுசக்தி திட்டம் மற்றும் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை அழிப்பது அல்லது அகற்றுவது குறித்த அடுத்தகட்ட பேச்சுவார்த்தைகள் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டால் அது உலக நாடுகளுக்குப் பெரும் நிம்மதியைத் தரும் என்றாலும், இரு நாடுகளின் நீண்ட காலப் பகை இதன் மூலம் முழுமையாகத் தீருமா என்பதை நாம் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.
