பொதுவாகவே மனிதர்கள் நாள் முழுவதும் புத்துணர்ச்சியாக இருக்க வேண்டுமென்றால் சராசரியாக 6 முதல் 8 மணி நேர தூக்கம் என்பது அவசியம் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். செல்போன் பயன்பாடு தற்போது அதிகரித்துவிட்ட நிலையில் மனிதர்களின் தூங்கும் நேரம் என்பது குறைந்துவிட்டது. பெரும்பாலும் 58 சதவீதம் இந்தியர்கள் இரவு 11 மணிக்கு மேலாக தான் தூங்குகிறார்கள். காலையில் 50 சதவீத மக்கள் சோர்வாக உணர்கிறார்கள் என ஆய்வறிக்கை கூறுகிறது. இப்படியான நிலையில் பெண் ஒருவர் நன்றாக தூங்கியதற்காக ஒன்பது லட்சம் ரூபாய் பரிசு வென்றுள்ளார்.
அதாவது பெங்களூருவை மையமாகக் கொண்டு இயங்கி வரும் WakeFit என்ற ஸ்டார்ட் அப் நிறுவனம் தூங்குவதை ஊக்கப்படுத்தும் வகையில் கடந்த நான்கு ஆண்டுகளாக Sleep Internship நடத்தி வருகின்றது. இந்த ஆண்டு நடைபெற்ற இந்த போட்டிக்கு இலட்சக்கணக்கானோர் விண்ணப்பித்திருந்த நிலையில் 15 பேர் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டனர். இவர்கள் அனைவருக்கும் மெத்தைகள் மற்றும் தொடர்பு இல்லாத தூக்க கண்காணிப்பு சாதனங்கள் வழங்கப்பட்டது. இதன் மூலமாக அவர்களுடைய தூக்க நேரம் மற்றும் தூக்கத்தின் தரம் கண்காணிக்கப்பட்டது.
இந்த போட்டியில் கலந்து கொள்பவர்கள் தொடர்ச்சியாக 60 நாட்களுக்கு குறைந்தது 9 மணி நேரம் தூங்க வேண்டும். இதில் கண்ணை கட்டி படுக்கையை தயார் செய்வது போன்ற சில செயல்பாடுகளும் இடம்பெற்று இருந்தது. இதில் தேர்வான பதினைந்து பேருக்கும் தலா ஒரு லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்பட்ட நிலையில் இந்த போட்டியில் 96.36 மதிப்பெண்கள் பெற்று புனேவை சேர்ந்த pooja Madhav Wavhal சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். இவருக்கு 9.1 லட்சம் பரிசு வழங்கப்பட்டுள்ளது. 22 வயதான பூஜா ஐபிஎஸ் ஆகும் ஆசையில் யுபிஎஸ்இ தேர்வு தயாராகி வருகின்றார். தூங்கியே ₹9 லட்சம் ரூபாய் பரிசு வென்ற இந்த பெண்ணுக்கு பலரும் தங்கள் பாராட்டுக்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.
