பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள மிர்பூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில், விண்ணை முட்டும் விலைவாசி உயர்வு மற்றும் பாகிஸ்தான் நிர்வாகத்தின் முறையற்ற நடவடிக்கைகளுக்கு எதிராக ‘ஜாயிண்ட் அவாமி ஆக்ஷன் கமிட்டி’ (JAAC) சார்பில் தீவிர போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ரவாலகோட்டில் தொடங்கி முசாஃபராபாத் வரை திரண்ட ஆயிரக்கணக்கான மக்களின் மாபெரும் பேரணியைக் கண்டு அதிர்ச்சியடைந்த பாகிஸ்தான் ராணுவப் படைகள், மக்கள் மீது வெறித்தனமான அடக்குமுறையைக் கட்டவிழ்த்துவிட்டுள்ளன. இந்த கொடூரத் தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 30-க்கும் மேற்பட்டோர் பரிதாபமாகக் கொல்லப்பட்டதோடு, 33-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து உயிருக்குப் போராடி வருகின்றனர்.
இச்சம்பவம் குறித்துச் செய்தி வெளியிட்ட ‘நியூயார்க் டைம்ஸ்’ நாளிதழ், அப்பகுதியை ‘பாகிஸ்தான் நிர்வகிக்கும் காஷ்மீர்’ என்று குறிப்பிட்டது இந்தியத் தரப்பில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. உலகளவில் கவனம் பெற்ற இந்தச் செய்தியில், பாகிஸ்தானின் சட்டவிரோத ஆக்கிரமிப்பை மறைக்கும் வகையில் பன்னாட்டு ஊடகம் இத்தகைய சொற்றொடரைப் பயன்படுத்தியதற்குப் பலதரப்பிலிருந்தும் கண்டனக் குரல்கள் வலுத்து வருகின்றன. இந்தியாவின் பூகோள எல்லை நிலையைச் சிதைக்கும் வகையில் வெளியான இந்தச் செய்தி, பாகிஸ்தான் ராணுவத்தின் மனித உரிமை மீறல்களைத் திசைதிருப்பும் முயற்சியாகவே பார்க்கப்படுகிறது.
நியூயார்க் டைம்ஸின் இந்தத் தவறான சித்தரிப்புக்கு எக்ஸ் தளத்தில் இந்தியத் தூதரகம் உடனடியாகவும் அழுத்தமாகவும் தகுந்த பதிலடி கொடுத்துள்ளது. “‘பாகிஸ்தானிய காஷ்மீர்’ என்றொரு பிராந்தியமே கிடையாது; அங்கே இருப்பது சட்டவிரோதமாகப் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதி மட்டுமே. ஜம்மு-காஷ்மீரும் லடாக்கும் இந்தியாவின் பிரிக்க முடியாத ஒருங்கிணைந்த அங்கங்கள்” என்று திட்டவட்டமாகத் தெளிவுபடுத்தியுள்ளது. மேலும், பாகிஸ்தான் படைகளால் நிகழ்த்தப்பட்ட இந்தப் படுகொலைகள் குறித்துச் சுதந்திரமான மற்றும் தன்னிச்சையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று மனித உரிமைகள் ஆணையமும் வலியுறுத்தியுள்ளது.
