தமிழக வெற்றி கழகத்தின் உயர்நிலைக் குழு அமைப்பாளரும் அதிமுகவின் முன்னாள் மூத்த தலைவருமான செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, தமிழக அரசியலில் பொங்கல் பண்டிகைக்கு பிறகு ஒரு மிகப்பெரிய திருப்புமுனை ஏற்படும் என்று கணித்து பேசினார். அதிமுகவில் அதிருப்தியில் உள்ள பல முக்கிய நிர்வாகிகள் விஜயின் தூய்மையான அரசியல் கொள்கையால் ஈர்க்கப்பட்டு தமிழக வெற்றிக்கழகம் கட்சியில் இணைய தயாராக உள்ளதாக செங்கோட்டையன் தெரிவித்தார்.
அதிமுகவில் இருந்து விலகியவர்கள் மட்டுமல்லாமல் தற்போது பொறுப்பில் உள்ள சில முக்கிய நபர்களும் தமிழக வெற்றிக்கழகம் கட்சியை நோக்கி வர வாய்ப்புள்ளது. இது வெறும் ஆரம்பம்தான் என்று கூறி கட்சியின் வளர்ச்சி குறித்த நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளார். மேலும் ஓபிஎஸ் மற்றும் தினகரன் ஆகியோர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுகவில் இணைய வாய்ப்பில்லை. மாறாக அவர்கள் தமிழக வெற்றிக்கழகம் போன்ற மாற்றுக் கட்சிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாக சூசகமாக தெரிவித்துள்ளார். இவருடைய இந்த பேச்சு தற்போது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது.
