தமிழ் சினிமாவில் அந்தந்த காலத்தில் குறிப்பிட்ட நடிகர்கள் ரசிகர்களுக்கு வழிபாட்டுக்கு உரிய பிம்பங்களாக இருப்பார்கள். எம் ஜி ஆர், சிவாஜி, ரஜினி, கமல், விஜய், அஜித் என இந்த பட்டியல் இப்போது வரை நீண்டுகொண்டு வருகிறது. அப்படி நடிகர்களுக்கு இணையாக ஒரு கல்ட் பிம்பமாக தமிழ் சினிமாவில் 40 ஆண்டுகளாக கோலோச்சி வருபவர் இளையராஜா.
தமிழ் சினிமாவில் மட்டுமில்லை, இந்திய மற்றும் சினிமாவிலேயே அதிக படங்களுக்கு இசையமைத்தவர் என்ற பெருமைக்குரியவர் இசைஞானி இளையராஜா. கிட்டத்தட்ட 1500 படங்களுக்கு மேல் இசையமைத்து சாதனைப் படைததுள்ள அவர் இப்போது 82 வயதாகும் நிலையிலும் வெற்றிமாறன் மற்றும் தியாகராஜன் குமாரராஜா உள்ளிட்ட முன்னணி இயக்குனர்களின் படங்களுக்கு அவர் இசையமைத்து வருகிறார்.
இளையராஜா தான் தன்னுடைய பீக் ஃபார்மில் இருந்த போது பல இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு சம்பளம் பெற்றுக்கொள்ளாமல் இசையமைத்துக் கொடுத்துள்ளார். அப்படி அவர் உதவிய இயக்குனர்களில் ஒருவர்தான் மணிரத்னம். மணிரத்னம் ஆரம்பத்தில் இயக்கிய சில படங்கள் பெரிய வெற்றியைப் பெறவில்லை. அவர் தனது முதல் ஹிட்டை மௌனராகம் திரைப்படத்தின் மூலமாகதான் கொடுத்தார்.
அதனால் அதற்கு முன்புவரை அவருக்கு படங்கள் கிடைப்பது எளிதான காரியமாக இருக்கவில்லை. ஆனால் அவரிடம் திறமை இருப்பதை கவனித்த இளையராஜா, அவரை வைத்து படம் பண்ண சொல்லி பல தயாரிப்பாளர்களிடம் சிபாரிசு செய்துள்ளார். ஆனால் தான் இப்படி உதவி செய்ததை அவர் மணிரத்னத்திடம் கூட சொல்லவில்லையாம்.
பல ஆண்டுகள் கழித்து ஒரு நேர்காணலில் இதை இளையராஜா பகிர்ந்துகொண்டுள்ளார். மணிரத்னம் இளையராஜா கூட்டணியில் உருவான பகல் நிலவு, நாயகன், மௌன ராகம், கீதாஞ்சலி, அக்னி நட்சத்திரம், அஞ்சலி, தளபதி ஆகிய படங்கள் இசை ரசிகர்களுக்கு ஒரு பல்சுவை விருந்தாக அமைந்தன.
தளபதி படத்துக்குப் பிறகு இந்த கூட்டணி பிரிந்தது. அதன் பிறகு மணிரத்னம் ஏ ஆர் ரஹ்மானோடு இணைந்து பணியாற்ற ஆரம்பித்தார் என்பது ரசிகர்கள் அறிந்ததே.