இன்றைய காலகட்டத்தில் சேமிப்பு இல்லாமல் வாழ்க்கை நடத்துவது மிகவும் கஷ்டம். அதனால் திட்டமிட்டு சேமிப்பது என்பது அத்தியாவசியமானது. விலைவாசி உயர்வு, கல்வி, மருத்துவம் என பல செலவுகள் போக சேமிப்பு இருந்தால் தான் நல்லதொரு வாழ்க்கையை நம்மால் ஏற்படுத்திக் கொள்ள முடியும். ஆனால் ஒரு சிலருக்கு பணத்தை அதிகம் செலவு செய்யும் பழக்கம் இருக்கும். அப்படிப்பட்டவர்கள் பணத்தை சேமிக்க வேண்டும் என்று விரும்பினாலும் கூட அவர்களால் முடியாது. ஒரு சில எளிமையான வழிமுறைகளை பின்பற்றும்போது உங்களால் பணம் சேமிக்க முடியும். அது என்னென்ன என்பதை பற்றி இனி காண்போம்.
முதலில் உங்களை எது உடனடியாக அதிக செலவு செய்ய வைப்பது என்பதை கண்டுபிடிங்கள். ஒன்று ஆன்லைன் ஷாப்பிங் ஆக இருக்கலாம். இல்லை நண்பர்களுடன் வெளியில் செல்வது போன்றவை இருக்கலாம். அவற்றை கண்டறிந்து அதில் எதை குறைக்க முடியும் என்பதை பார்த்து திட்டமிடுங்கள்.
மாத சம்பளம் கையில் வந்த உடனேயே ஒரு பட்ஜெட்டை தயார் செய்து கொள்ளுங்கள். அத்தியாவசிய செலவுகள் உங்களுடைய விருப்பமான செலவுகள் போன்றவற்றை திட்டமிடுங்கள். அப்போது உங்களுக்கு தேவையற்ற செலவு என்ன என்பதை உங்களால் கண்டறிந்து கொள்ள முடியும். அதை குறைப்பதன் மூலம் உங்களால் பணத்தை எளிதாக சேமிக்க முடியும்.
நாம் நிறைய பொருட்கள் வாங்க வேண்டும் என்று ஆசைப்படுவோம். ஆனால் பெரும்பாலான பொருட்கள் நம் வீட்டில் சும்மா ஏதோ ஒரு ஓரத்தில் இருந்து கொண்டிருக்கும். அதனால் ஒரு பொருளை கண்டவுடன் வாங்கும் பழக்கத்தை கைவிட்டு விட்டு உண்மையாக அந்த பொருளினால் நமக்கு பயன்பாடு இருக்கிறதா என்று யோசனை செய்து வாங்குங்கள். தேவையில்லாத பணத்தை செலவு செய்வதை குறைக்க போன் பே, கூகுள் பே போன்றவற்றை உபயோகப்படுத்தாமல் கையில் பணத்துடன் சென்று நீங்கள் ஷாப்பிங் செய்யுங்கள். நம் கையால் பணத்தை கொடுக்கும் போது நாம் எவ்வளவு கொடுக்கிறோம் என்பது நமக்கு தெரியும். போன் மூலமாக ஜிபே போன்றவற்றை நாம் பயன்படுத்தும் போது அதன் வேல்யூ நமக்கு தெரியாமல் போகலாம்.
இதுபோல வெளியூர் பயணங்கள் மருத்துவ செலவு போன்றவற்றிற்கும் திட்டமிடுதல் என்பது மிகவும் முக்கியமானது. நாம் மிகவும் கட்டுப்பாடோடு இருக்க வேண்டும் என்று சொல்லவில்லை. வாழ்க்கை வாழ்வதற்கு தான். அதற்கு ஏற்றார் போல் சிறுசேமிப்பும் மிகவும் அத்தியாவசியமானது. நாம் திட்டமிட்டு நம்மளுடைய வருமானத்தை செலவு செய்யும்போது நாம் நினைத்ததை விட அதிகப்படியான பணத்தை நம்மால் சேமிக்க இயலும். ஒரு முறை இதை முயற்சி செய்து பார்த்து விட்டால் அடுத்தடுத்து நமக்கு அதே பழக்கம் ஆகிவிடும். அதனால் இனி இந்த வழிமுறைகளை பின்பற்றினால் கண்டிப்பாக உங்களாலும் பணத்தை சேமிக்க முடியும்.