தமிழ் சினிமாவில் தனது நடிப்பால் மக்கள் மனதில் இடம் பிடித்தவர் விஜயகாந்த். இதுவரை சுமார் 150-க்கும் மேற்பட்ட படங்களில் விஜயகாந்த் நடித்துள்ளார். ஏராளமான ஃபிலிம் ஃபேர் விருதுகள், தமிழக அரசின் விருதுகள், கலைமாமணி விருது உள்ளிட்ட விருதுகளை விஜயகாந்த் தன்வசம் ஆக்கியுள்ளார்.
கடந்த 2005-ஆம் ஆண்டு தேசிய முற்போக்கு திராவிட கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியை தொடங்கி கட்சியின் நிறுவனத் தலைவராக பொறுப்பேற்றார். வைதேகி காத்திருந்தாள், பூந்தோட்ட காவல்காரன், அம்மன் கோவில் கிழக்காலே, சின்ன கவுண்டர், ஆனஸ்ட் ராஜ், புலன் விசாரணை, வானத்தைப்போல, தவசி, ரமணா உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களில் விஜயகாந்த் நடித்துள்ளார்.
தனது உணர்ச்சி பூர்வமான நடிப்பால் மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ளார். கடந்த டிசம்பர் மாதம் விஜயகாந்த் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். விஜயகாந்த் மற்றும் இப்ராஹிம் ராவுத்தர் இடையே இருக்கும் நட்பு அனைவரும் அறிந்ததே. கடந்த 1979-80 இடைப்பட்ட காலங்களில் விஜயகாந்த் கடுமையான வறுமையால் வாடி உள்ளார்.
அப்போது ஏவிஎம் நிறுவனத்தினர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த முரட்டுக்காளை படத்தில் அவருக்கு வில்லனாக நடிக்க விஜயகாந்த்தை அணுகியுள்ளனர். அந்த படத்தில் நடிக்க விஜயகாந்த் முடிவு எடுத்துவிட்டார். ஆனால் இப்ராஹிம் ராவுத்தரோ, நீ ஹீரோவாக நடிக்க பிறந்தவன். நீ ஹீரோவாக மட்டுமே நடிக்க வேண்டும். தலைகீழாக நின்றாலும் உன்னை வில்லனாக நடிக்க விடமாட்டேன் என ஸ்ட்ரிக்ட்டாக கூறிவிட்டாராம்.