சென்னையில் தமிழக வெற்றிக் கழகத் (தவெக) தலைவர் சி.எம். விஜய் தலைமையில் இன்றும், நாளையும் ஐஏஎஸ் (IAS), ஐபிஎஸ் (IPS) மற்றும் ஐஎஃப்எஸ் (IFS) அதிகாரிகளின் மாநாடு நடைபெற உள்ளது, தமிழக அரசியல் மற்றும் நிர்வாக வட்டாரத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. தவெக அரசின் முதலாவது ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் மாநாடு இது என்பதால், இதன் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டின் முதல் நாளான இன்று, அரசின் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களின் செயல்பாடுகள் மற்றும் மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு நிலைமை உள்ளிட்ட முக்கியப் பிரச்சினைகள் குறித்து ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுடன் விரிவான ஆலோசனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
அதனைத் தொடர்ந்து, நாளை நடைபெறும் இரண்டாம் நாள் கூட்டத்தில் வனத்துறை சார்ந்த திட்டங்கள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் காடுகள் மேம்பாடு குறித்து ஐஎஃப்எஸ் அதிகாரிகளுடன் முதலமைச்சர் விஜய் முக்கிய ஆலோசனைகளை நடத்த உள்ளார். உள்கட்டமைப்பு மற்றும் நிர்வாகத் திறனை மேம்படுத்துவதற்கான முக்கிய முடிவுகள் இம்மாநாட்டில் எட்டப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
