தெலுங்கானாவின் ஓபுல் கேசவாபுரம் பகுதியைச் சேர்ந்த மகேந்தர் ரெட்டி என்பவர் மாதவி என்ற பெண்ணைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். ஹைதராபாத்தில் செல்போன் கடை நடத்தி வந்த மகேந்தருக்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமணத்திற்கு மீறிய உறவு இருந்தது தெரியவந்ததால், கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் கோபித்துக் கொண்டு தாய் வீட்டிற்குச் சென்ற மனைவியைச் சமாதானம் பேசுவதாகக் கூறி அழைத்த மகேந்தர், மீண்டும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த மகேந்தர், வீட்டில் இருந்த பேட்டால் மாதவியைக் கொடூரமாகத் தாக்கியுள்ளார். இதில் கை, கால்களில் முறிவு ஏற்பட்டு மாதவி மயங்கிய நிலையில், அவரது இரண்டு குழந்தைகளையும் கடத்திக் கொண்டு மகேந்தர் தப்பியோடினார். மேலும், மனைவியைக் கொன்றுவிட்டதாகவும் அடுத்துக் குழந்தைகளைக் கொல்லப் போவதாகவும் மிரட்டல் விடுத்துள்ளார். மயக்கம் தெளிந்து எழுந்த மாதவி போலிஸில் புகார் அளித்ததைத் தொடர்ந்து, போலிஸார் வழக்குப் பதிவு செய்து குழந்தைகளை மீட்கவும் மகேந்தரைக் கைது செய்யவும் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
