உத்தரகண்ட் மாநிலம் கேடாரநாத் புனிதப் பாதையில் உள்ள ‘ஜங்கிள் சட்டி’ பகுதியில், மும்பையைச் சேர்ந்த மஞ்சி வாவியா மற்றும் பஞ்சி படேல் ஆகிய இரு யாத்ரீகர்கள் நடைபயணமாகச் சென்று கொண்டிருந்தனர். அப்போது, விலங்குகளை அழைத்துச் செல்வது தொடர்பான பாதையில் ஏற்பட்ட சிறிய வாக்குவாதம் தகராறாக மாறியது.
இந்த வாக்குவாதத்தின் போது, அங்கு இருந்த மூன்று குதிரை ஓட்டுநர்கள் யாத்ரீகர்களை தடிகளால் கொடூரமாகத் தாக்கியுள்ளனர். இதில் இரு மூத்த யாத்ரீகர்களுக்கும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் சிந்தி அவதியுற்றனர். இந்தத் தாக்குதலின் போது அங்கு இருந்தவர்கள் பதிவு செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகப் பரவியது.
பாதிக்கப்பட்ட யாத்ரீகர்கள் சோன்பிரயாக் காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், தாக்குதலில் ஈடுபட்ட அடையாளம் தெரியாத மூன்று குதிரை ஓட்டுநர்கள் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. யாத்ரீகர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறை உறுதியளித்துள்ளது.
