“மன்னர் முகத்திற்கு நேராக கேட்ட மேயர்!… “கோஹினூர் வைரத்தை இந்தியாவிடமே கொடுங்க!”… பிரிட்டன் அரசருக்கு விடுக்கப்பட்ட அதிரடி கோரிக்கை… பரபரக்கும் உலக அரசியல்…!!!

By Muthu Mani on சித்திரை 30, 2026

Spread the love

அமெரிக்காவிற்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லஸ், நியூயார்க் நகர மேயர் சோஹ்ரன் மம்தானியைச் சந்திக்க உள்ள நிலையில், கோஹினூர் வைரம் குறித்த விவாதம் மீண்டும் சர்வதேச அளவில் சூடுபிடித்துள்ளது. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மேயர் மம்தானி, மன்னரைச் சந்திக்கும் போது காலனித்துவ காலத்தின் அடையாளமான கோஹினூர் வைரத்தை மீண்டும் இந்தியாவிடமே ஒப்படைக்குமாறு வலியுறுத்தப் போவதாகத் தெரிவித்துள்ளார். இரட்டை கோபுரத் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் இந்தச் சந்திப்பு நடைபெற உள்ள நிலையில், அதிகாரப்பூர்வ நிகழ்ச்சி நிரலில் இல்லாவிட்டாலும் இந்த வரலாற்று அநீதி குறித்துப் பேசத் தான் தயார் என மம்தானி துணிச்சலாக அறிவித்துள்ளார்.

ஆந்திராவின் கொல்லூர் சுரங்கத்தில் கண்டெடுக்கப்பட்ட 105.6 காரட் எடை கொண்ட கோஹினூர் வைரம், வெறும் விலைமதிப்பற்ற கல் மட்டுமல்ல, அது இந்தியாவின் சிதைக்கப்பட்ட வரலாற்றின் சாட்சியாகும். கடந்த 1849-ஆம் ஆண்டு லாகூர் உடன்படிக்கையின் போது, சிறுவனாக இருந்த மகாராஜா துலீப் சிங்கிடமிருந்து பிரிட்டிஷ் கிழக்கிந்திய நிறுவனம் இந்த வைரத்தைக் கட்டாயப்படுத்திப் பறித்துச் சென்றது. முகலாயர்கள், பாரசீகர்கள் மற்றும் ஆப்கானிய ஆட்சியாளர்களின் கரங்களைக் கடந்து சென்ற இந்த வைரம், காலனித்துவச் சுரண்டலின் உச்சக்கட்ட அடையாளமாக இன்றும் லண்டன் கோபுரத்தில் (Tower of London) வைக்கப்பட்டுள்ளது.

   

இந்த வைரத்தைச் சுற்றி ஒரு விசித்திரமான நம்பிக்கையும் நிலவுகிறது; அதாவது, இந்த வைரம் ஆண்களுக்குத் துரதிர்ஷ்டத்தைத் தரும் எனக் கருதப்படுவதால், இந்தியாவில் இதனை அணிந்த மன்னர்களின் சாம்ராஜ்ஜியங்கள் சரிந்ததாகக் கூறப்படுகிறது. இதனாலேயே பிரிட்டிஷார் இதனைத் தங்கள் நாட்டு மகாராணிகளின் கிரீடத்தில் பதித்து வந்தனர். இருப்பினும், இது வற்புறுத்தலின் பேரில் பறிக்கப்பட்ட இந்தியாவின் சொத்து என்பதால், அதனைத் திரும்பப் பெற வேண்டும் என்ற குரல்கள் வலுத்து வருகின்றன. காலனித்துவக் காலத்து அநீதிகள் சரிசெய்யப்பட வேண்டிய நேரம் இது என்பதை மம்தானியின் இந்தக் கருத்து உலகிற்கு மீண்டும் நினைவூட்டியுள்ளது.