சென்னையில் 19 வயது கல்லூரி மாணவியை அடித்துத் துன்புறுத்தி, அவரது அந்தரங்கப் புகைப்படத்தை வாட்ஸ்அப் குரூப்பில் பகிர்ந்த 27 வயது ஜிம் பயிற்சியாளரை தலைமைச் செயலக காலனி காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்தனர்.
கீழ்ப்பாக்கம் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி, கடந்த 2024-ஆம் ஆண்டு ஜிம்மில் ஓட்டேரியைச் சேர்ந்த இம்தியாஸ் ஷெரிப் (27) என்பவரைச் சந்தித்துப் பழகியுள்ளார். நாளடைவில் அவரது தவறான நடத்தையால் மாணவி விலகிச் செல்ல முயன்றபோது, தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டித் தொடர்பில் இருந்துள்ளார். பின்னர் அம்மாணவியின் அந்தரங்கப் புகைப்படத்தைக் கைப்பற்றிய இம்தியாஸ், அதைக் காட்டி மிரட்டத் தொடங்கியுள்ளார்.
கடந்த செப்டம்பர் 28-ஆம் தேதி கல்லூரிக்குச் சென்ற மாணவியை வழியில் மறித்து அசிங்கமாகப் பேசித் தாக்கிய இம்தியாஸ், தனது ஆசைக்கு இணங்குமாறு மிரட்டியதுடன், அம்மாணவி இருந்த வாட்ஸ்அப் குரூப்பிலேயே அவரது ஆபாசப் படத்தைப் பகிர்ந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி அளித்த புகாரின் பேரில், வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் இம்தியாஸ் ஷெரிப்பை வெள்ளிக்கிழமை கைது செய்து, அவரது செல்போனைப் பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திச் சிறையில் அடைத்தனர்.
