மத்திய பிரதேச மாநிலம் குணா மாவட்டத்தில் உள்ள காதேர் கிராமத்தின் அருகே, தேசிய நெடுஞ்சாலையில் கணவனும் மனைவியும் பயணித்துக் கொண்டிருந்தபோது இந்த அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. கடந்த வியாழக்கிழமையன்று அப்பகுதியில் சென்றுகொண்டிருந்த தம்பதியை வழிமறித்த மர்ம நபர்கள் சிலர், எதிர்பாராத விதமாகப் பெண்ணை வண்டியில் இருந்து கீழே இழுத்துத் தள்ளியுள்ளனர்.
அதன் தொடர்ச்சியாக, அந்தப் பெண்ணை தரதரவென்று அருகில் உள்ள அடர்ந்த காட்டுப் பகுதிக்கு மர்ம நபர்கள் வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்றனர். கண்முன்னே தன் மனைவி கடத்தப்படுவதைக் கண்டு அதிர்ச்சியடைந்த கணவர், அவரைப் போராடி காப்பாற்றுவதற்காக அந்த நபர்களைத் துரத்திச் சென்றுள்ளார். ஆனால், அந்த கும்பல் கணவரை ஒன்றுசேர்ந்து கொடூரமாகத் தாக்கி, அவரை நிலைகுலையச் செய்து தப்பியோடியது.
காயமடைந்த கணவரைப் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ள காவல்துறையினர், இச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும், காட்டுப் பகுதிக்குள் கடத்தப்பட்ட பெண்ணைத் தீவிரமாகத் தேடி வருவதோடு, தலைமறைவாக உள்ள மர்ம நபர்களைப் பிடிக்கத் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
