பழநி நில மோசடி விவகாரம்… சிபிசிஐடி விசாரணை… அறநிலையத்துறையில் அதிரடி மாற்றம்… எல்லா டெண்டர்களும் ஆன்லைன்லதான்…ஜிஎஸ்டி, பான் எண் கட்டாயம்…தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு…!

By Visaka on ஆடி 30, 2026

Spread the love

அறநிலையத்துறையின் கீழ் இயங்கும் கோயில்களில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யும் வகையில், இனி அனைத்து டெண்டர்களும் முழுக்க முழுக்க ஆன்லைன் முறையிலேயே நடத்தப்படும் என அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் அதிரடியாக அறிவித்துள்ளார். அதன்படி, கோயில்களில் உள்ள கார் பார்க்கிங் வசதிகளுக்கு டிஜிட்டல் முறையில் பில் வழங்குவதுடன், பார்க்கிங், மொட்டை போடுதல் மற்றும் கடைகள் அமைத்தல் போன்றவற்றுக்கு பொதுவான டெண்டர் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், அனைத்து டெண்டர்களுக்கும் ஜிஎஸ்டி மற்றும் பான் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளதோடு, தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் ஒரே மாதிரியான உறுதிமொழி படிவங்களும் உருவாக்கப்பட்டுள்ளன. அனைவருக்கும் சம வாய்ப்பு வழங்கும் நோக்கில் இந்த சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதற்கிடையே, பழநி விவகாரம் தொடர்பாகத் தீவிர விசாரணை நடைபெற்று வருவதாகவும், தனது கோரிக்கையை ஏற்று முதலமைச்சர் இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றியுள்ளதாகவும் அமைச்சர் ரமேஷ் குறிப்பிட்டார். ஏற்கனவே இவ்வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், சம்பந்தப்பட்டவர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார். மேலும், பழநி விவகாரத்தில் தன் மீதும் தனது குடும்பத்தின் மீதும் அதிமுக ஐடி விங் திட்டமிட்டுப் பொய் பரப்புரை செய்வதாகக் குற்றம் சாட்டிய அவர், தாங்கள் வாடகை வீட்டில்தான் வசித்து வருவதாகவும், தன் புகழைக் கெடுப்பதற்காகவே அரசியல் காரணங்களுக்காக இதுபோன்ற அவதூறுகள் பரப்பப்படுவதாகவும் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.