அனிதா ராதாகிருஷ்ணன் ரவுடியா… அப்போ நீங்க யாரு… தவெகவை கிழித்து தொங்கவிட்ட திமுக பரந்தாமன்…!

By SATHISH R on ஆடி 4, 2026

Spread the love

அவதூறு வழக்கில் திமுக முன்னாள் அமைச்சரும், திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ.வுமான அனிதா ராதாகிருஷ்ணன் தமிழக வெற்றிக் கழக அரசால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டு, பின்னர் நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்த கைது நடவடிக்கை திமுகவினர் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், திமுக தலைவர்கள் பலரும் முதலமைச்சர் விஜய்க்கும் தவெக அரசுக்கும் தங்களது கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், திமுக சட்டத்துறை இணைச் செயலாளரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான எழும்பூர் பரந்தாமன் செய்தியாளர்களைச் சந்தித்து தவெக அரசை மிகக் கடுமையாக விமர்சித்துப் பேசியுள்ளார்.

செய்தியாளர் சந்திப்பில் பேசிய பரந்தாமன், தவெக ஆட்சிப் பொறுப்பேற்று 55 நாட்களைக் கடந்த நிலையிலும் மாநில நிர்வாகத்தைப் பற்றி கவலைப்படாமல், தினந்தோறும் திமுக மீது என்ன குற்றம் சுமத்தலாம் என்று சிந்தித்து ஒவ்வொரு நாளும் ஒரு கதையை அரங்கேற்றி வருவதாகக் குற்றம் சாட்டினார். பொதுவாக அவதூறு வழக்குகளில் கைது செய்ய வேண்டிய அவசியம் இல்லாதபோது, அனிதா ராதாகிருஷ்ணனை ஏன் காவல்துறை கைது செய்தது என்றும், சுமார் 6 மணி நேரம் அவரிடம் நடத்திய விசாரணையின் பின்னணியில் இருக்கும் மர்மம் என்ன என்றும் அடுக்கடுக்கான கேள்விகளை அவர் முன்வைத்தார்.

   

மேலும், எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணையுமாறு காவல்துறை தன்னை வற்புறுத்தியதாக அனிதா ராதாகிருஷ்ணனே பேட்டியளித்ததை சுட்டிக்காட்டிய பரந்தாமன், தவெக அரசு தற்போது பாஜகவின் பாணியைக் கையில் எடுத்துள்ளதாகச் சாடினார். மத்தியில் ஆளும் பாஜக எப்படி அமலாக்கத்துறையை வைத்து பிற கட்சித் தலைவர்களை மிரட்டி தங்கள் கட்சியில் இணைக்கிறதோ, அதேபோல தவெகவும் தமிழக காவல்துறையைத் தவறாகப் பயன்படுத்தி திமுகவினரை மிரட்டி வருவதாக அவர் பகிரங்கமாகத் தெரிவித்தார். இந்தியாவிலேயே அரசியலுக்கு முன்மாதிரியாக விளங்கிய தமிழ்நாடு, இன்று தவெகவால் மிகவும் மோசமான அரசியலை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாக அவர் வேதனை தெரிவித்தார்.

   

இறுதியாக, தவெக அரசு கிரிமினல்கள் நிரம்பிய ஒரு அமைச்சரவையை வைத்துள்ளதாகக் கடுமையான விமர்சனத்தை பரந்தாமன் முன்வைத்தார். அனிதா ராதாகிருஷ்ணனை ரவுடி என்று விமர்சித்த தவெக அமைச்சர் நிர்மல்குமாரை ‘420’ என்று சாடிய அவர், திமுக வைக்கும் குற்றச்சாட்டுகள் தவறு என்றோ உண்மைக்கு புறம்பானது என்றோ நிரூபிக்கத் துப்பில்லாமல் தனிமனித தாக்குதல்களில் தவெக ஈடுபட்டு வருவதாகக் கூறினார். ஒரு அரசியல் கட்சி எப்படி இருக்கக் கூடாது என்பதற்கு மிகச்சிறந்த உதாரணம் தவெக தான் என்று குறிப்பிட்ட அவர், கிரிமினல் பின்னணி கொண்ட ஒரு அமைச்சரவையை வைத்துக் கொண்டு திமுகவை கேள்வி கேட்க தவெகவிற்கு எந்த அருகதையும் இல்லை என்று கூறி தனது பேட்டியை நிறைவு செய்தார்.