கலைவாணர் என்.எஸ் கிருஷ்ணன் தனது நடிப்பாலும் பகுத்தறிவு கருத்துக்களாலும் மக்களை தன்வசம் ஈர்த்தவர். முதலில் என்.எஸ் கிருஷ்ணன் நாடகத்துறையில் பிரபல நடிகராக இருந்தார். நடிகராக மட்டுமில்லாமல் சிறந்த பாடல்களையும் பாடியுள்ளார். சார்லி சாப்ளின் உலகில் நகைச்சுவை மன்னனாக வலம் வந்தார்.
இந்தியாவின் சார்லி சாப்ளின் என அழைக்கப்பட்டவர் என்.எஸ். கிருஷ்ணன்.பிரபல இயக்குனரான கே. சுப்ரமணியம் தியாகபூமி, கச்ச தேவயானி, அனந்தசயனம், கீதகாந்தி, பாண்டித்தேவன் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். இவரும் என்.எஸ்.கிருஷ்ணனும் நெருங்கிய நண்பர்கள். இந்த நிலையில் ஒருமுறை சுப்ரமணியம் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். அவரை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர்.
என் எஸ் கிருஷ்ணன் தீவிர நாத்திகர் ஆவார். இவர் தனது நண்பரான கே. சுப்பிரமணியம் குணமாகி நல்லபடியாக வீட்டிற்கு வர வேண்டும் என நினைத்தார். இதனால் சாமுண்டீஸ்வரர் கோவிலுக்கு சென்று தனது நண்பருக்காக வேண்டிக்கொண்டு அங்கிருந்து குங்கும பிரசாதத்தை எடுத்து வந்து கே.சுப்பிரமணியனிடம் கொடுத்துள்ளார். அந்த குங்குமத்தை நெற்றியில் வைத்துக் கொள்ளுமாறு சுப்பிரமணியனிடம் கூறினார்.
அப்போது சுப்பிரமணியம் நீங்க தான் நாத்திகர் ஆச்சே. நீங்க எப்படி கோவிலுக்கு போனீங்க என கேட்டுள்ளார். அதற்கு பதிலளித்த என்.எஸ் கிருஷ்ணன் நான் நாத்திகர்தான். ஆனால் நீங்க ஆத்திகர் தானே. நீங்கள் குணமாக வேண்டும் என்பதற்காக கோவிலுக்கு சென்றேன் என கூறியுள்ளார். தனது நண்பருக்காக கொள்கையை என்.எஸ் கிருஷ்ணன் விட்டு கொடுத்துள்ளார்.