சென்னை எழும்பூர் தமிழ் சாலை பகுதியில் உள்ள தனியார் லாட்ஜில் தங்கும் வெளிமாநில நபர்களின் செல்போன் எண்களைச் சேகரித்து, வாட்ஸ்அப் மூலம் இளம்பெண்களின் புகைப்படங்களை அனுப்பி பாலியல் தொழில் நடப்பதாக விபசார தடுப்பு பிரிவு உதவி கமிஷனர் ராஜலட்சுமிக்கு ரகசிய புகார் கிடைத்தது. இந்தப் புகாரின் அடிப்படையில், உடனடி விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு விபசார தடுப்பு பிரிவு-1 இன்ஸ்பெக்டர் சிவகுமாருக்கு உதவி கமிஷனர் உத்தரவிட்டார்.
உத்தரவின்பேரில், இன்ஸ்பெக்டர் சிவகுமார் தலைமையிலான தனிப்படை போலீசார் சம்பந்தப்பட்ட லாட்ஜில் திடீர் அதிரடி சோதனை மேற்கொண்டனர். சோதனையின் போது, லாட்ஜின் முதல் மாடியில் உள்ள ஒரு அறையில் இரண்டு இளம்பெண்களை வைத்து சட்டவிரோதமாக பாலியல் தொழில் நடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில், ராஜா அண்ணாமலைபுரத்தைச் சேர்ந்த புரோக்கர் டேவிட் ஜெயகுமார் (39) என்பவரே இதற்குப் பின்னணியில் செயல்பட்டது உறுதியானது.
இதையடுத்து, புரோக்கர் டேவிட் ஜெயகுமாரை போலீசார் கைது செய்ததோடு, வாடிக்கையாளர்களைத் தொடர்புகொள்ள அவர் பயன்படுத்திய 3 செல்போன்களையும் பறிமுதல் செய்தனர். பாலியல் தொழிலில் கட்டாயப்படுத்தி ஈடுபடுத்தப்பட்ட 2 இளம்பெண்கள் மீட்கப்பட்டு, அரசு மகளிர் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர். கைது செய்யப்பட்ட டேவிட் ஜெயகுமார், சைதாப்பேட்டை 23-வது நீதிமன்ற நீதிபதி பத்மகுமாரி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு, அவரது உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.
