ஒவ்வொரு தம்பதியினரும் 3 குழந்தைகள் பெற்றுக்கொள்ளுங்கள்…. சந்திரபாபு நாயுடுவின் முக்கிய வேண்டுகோள்…!!

By Soundarya on மார்கழி 27, 2025

Spread the love

ஆந்திர பிரதேச முதலமைச்சர் திரு. சந்திரபாபு நாயுடு அவர்கள், ஒவ்வொரு தம்பதியினரும் குறைந்தபட்சம் மூன்று குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று  மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளார். திருப்பதியில் நடைபெற்ற பாரதிய விஞ்ஞான் சம்மேளனத்தில் பேசிய அவர், தென்னிந்திய மாநிலங்களில் மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் குறைந்து வருவதால், எதிர்காலத்தில் உழைக்கும் இளைஞர்களின் எண்ணிக்கை குறைந்து, முதியவர்களின் எண்ணிக்கை அதிகமாகும் அபாயம் உள்ளது.

தென்னிந்தியாவின் பிறப்பு விகிதம் தேசிய சராசரியான 2.1-ஐ விடக் குறைந்து 1.6-க்குச் சென்றுவிட்டது. இதை ஈடுகட்ட தம்பதிகள் அதிக குழந்தைகளைப் பெற்றுக் கொள்வது அவசியம் என்று அவர் வலியுறுத்தினார். இதற்கு முன் இரண்டு குழந்தைகளுக்கு மேல் இருந்தால் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட முடியாது என்ற விதி இருந்தது. ஆனால், தற்போது அதனை நீக்கிவிட்டு, இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகள் இருப்பவர்கள் மட்டுமே உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட முடியும் என்ற புதிய சட்டத்தைக் கொண்டு வர ஆந்திர அரசு திட்டமிட்டுள்ளது. அதிக குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளும் தம்பதிகளுக்குப் பல்வேறு ஊக்கத்தொகைகள் மற்றும் சலுகைகளை வழங்கவும் அரசு ஆலோசித்து வருகிறது