நாடு முழுவதும் அரசு ஊழியர்கள் பழைய பென்ஷன் திட்டத்திற்காக போராடி வருகிறார்கள். ஒரு சில மாநிலங்களில் பழைய பென்ஷன் திட்டம் அமல்படுத்தப்பட்டு விட்டது. ஆனால் தமிழக உள்ளிட்ட சில மாநிலங்களில் இன்னும் இந்த திட்டம் அமலுக்கு வரவில்லை. நாடு முழுவதும் தற்போது தேசிய பென்ஷன் திட்டம்தான் பரவலாக நடைமுறையில் உள்ளது. அதேபோல ஒருங்கிணைந்த பென்ஷன் திட்டம் என்ற புதிய திட்டமும் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இதனால் பென்ஷன் திட்ட விவகாரத்தில் அரசு ஊழியர்கள் மத்தியில் பலவிதமான குழப்பங்களும் எதிர்பார்ப்புகளும் உள்ளது.
இப்படியான நிலையில் பென்ஷன் திட்டம் தொடர்பான முக்கிய அறிவிப்பு ஒன்று தற்போது வெளியாகி உள்ளது. தமிழகத்தில் தற்போது பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் அமலில் உள்ளது. அதாவது இதில் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கு உறுதி செய்யப்பட்ட ஓய்வூதியம் கிடைக்காது. இதனால் பழைய ஓய்வூதியத்தை அமல்படுத்துவோம் என கூறி ஆட்சிக்கு வந்த திமுக அதனை நிறைவேற்றாததால் அரசு ஊழியர்கள் அதிருப்தியில் உள்ளனர். இப்படியான நிலையில் பழைய ஓய்வூதியம் குறித்து அறிவிப்பை முதல்வர் ஸ்டாலின் வெளியிடுவார் என்று அமைச்சர் ஐ பெரியசாமி தெரிவித்துள்ளார்.
