“ஹெலிகாப்டர் + ரோடு ஷோ”…. மதுராந்தகம், தாராபுரத்தை அலறவிடும் தவெக… அக்டோபர் 6 காரசார ட்விஸ்ட்…. முதலமைச்சர் விஜயின் அதிரடி ஆட்டம்….!

By Nanthini on ஐப்பசி 4, 2026

Spread the love

தமிழ்நாட்டில் காலியாக உள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு தனிச் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் களம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொகுதிகளுக்கான தேர்தல் பிரச்சாரம் இன்று மாலையுடன் நிறைவடைய உள்ள நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமான வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளன. வருகின்ற அக்டோபர் 6-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், அக்டோபர் 9-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

தாராபுரம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் சத்யபாமாவுக்கு ஆதரவு திரட்டுவதற்காக, முதலமைச்சரும் அக்கட்சியின் தலைவருமான விஜய் இன்று தீவிர பிரச்சாரம் மேற்கொள்கிறார். சென்னையிலிருந்து கோவைக்குத் தனி விமானத்தில் வந்தடையும் அவர், அங்கிருந்து ஹெலிகேப்டர் மூலம் தாராபுரம் மாருதி நகர் பகுதிக்கு வந்து சேருகிறார். அதைத்தொடர்ந்து, தொகுதி முழுவதும் பல்வேறு முக்கியப் பகுதிகளுக்குச் சென்று வாகனம் மூலமாகச் சாலை வலம் வந்து (Roadshow) வாக்காளர்களிடம் இறுதி நேர ஆதரவைத் திரட்டவுள்ளார்.

   

தாராபுரம் தொகுதியைப் பொறுத்தவரை தவெக சார்பில் சத்யபாமா களமிறக்கப்பட்டுள்ள நிலையில், திமுக சார்பில் சுகன்யா, அதிமுக சார்பில் பானுமதி, நாம் தமிழர் கட்சி சார்பில் கார்த்திகா மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் லட்சுமணன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். மதுராந்தகம் தொகுதியில் தவெக சார்பில் மரகதம் குமரவேல், திமுக சார்பில் பரந்தாமன், அதிமுக சார்பில் கணிதா சம்பத், நாம் தமிழர் கட்சி சார்பில் ஜானகிராமன் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சுகந்தி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

   

இடைத்தேர்தல் களம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதால், தொகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மதுராந்தகத்தில் 28 வேட்பாளர்களின் மனுக்களும், தாராபுரத்தில் 29 வேட்பாளர்களின் மனுக்களும் ஏற்கப்பட்டு இறுதி வேட்பாளர் பட்டியல் களத்தில் உள்ளது. அதிமுகவிடமிருந்து இத்தொகுதிகளைத் தக்கவைக்கவும், கைப்பற்றவும் தவெக, திமுக, அதிமுக உள்ளிட்ட பிரதான கட்சிகளிடையே கடும் போட்டி நிலவுவதால், தேர்தல் களம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.