திருமணமான ஒவ்வொருவரும் அடுத்ததாக எதிர்பார்ப்பது குழந்தை வரம் தான். ஒரு சிலருக்கு உடனடியாக குழந்தை கிடைத்துவிடும். ஒரு சிலருக்கு வருட கணக்கில் ஆனாலும் குழந்தை வரம் கிடைக்காமல் ஏங்கிக் கொண்டிருப்பர். தங்களை அம்மா, அப்பா என்று கூப்பிட ஒரு மழலை கிடைக்காதா என்று வருந்துபவர்கள் இன்றைய காலகட்டத்தில் அதிகமாக இருக்கிறார்கள். குழந்தைக்காக ஏங்குபவர்கள் எந்த கடவுளை வணங்கினால் குழந்தை வரம் கிடைக்கும் என்பதை பற்றி இனி காண்போம்.
குழந்தை பாக்கியத்தை அருளி வயிற்றில் வளரும் கருவை காத்து சுகப்பிரசவம் ஆக்கி அருள் புரியும் அன்னையாக போற்றப்படுகிறாள் தஞ்சாவூருக்கு அருகில் உள்ள திருக்கருகாவூரில் வீற்றிருக்கும் கர்ப்பரக்ஷாம்பிகை அம்பாள். குழந்தை வரம் வேண்டியும் கருவுற்ற பெண்கள் தங்களது கருவில் இருக்கும் குழந்தையை பாதுகாத்து சுகப்பிரசவம் ஆக வேண்டும் என்று இந்த கோயிலை தேடி வந்து வணங்குகின்றனர்.
யார் தம்மை தேடி வருகிறார்களோ அவர்களுக்கு குழந்தை வரத்தை அருளி சுகப்பிரசவத்தையும் அருளி இருக்கிறாள் அன்னை கர்பரக்ஷாம்பிகை. இந்தக் கோவிலில் வீற்றிருக்கும் சிவபெருமான் முல்லைவனநாதன் என்று அழைக்கப்படுகிறார். இந்த கோவில் கும்பகோணத்தில் இருந்து சுமார் 21 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
திருமணம் ஆகாமல் தடைப்பட்டு கொண்டிருப்பவர்களும் இந்த அம்பாளை தரிசித்து அர்ச்சனை செய்து வேண்டிக் கொண்டால் விரைவில் மாங்கல்யம் பாக்கியம் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது. கருவுற்ற தாய்மார்கள் அம்பாளின் திருபாதத்தில் வைத்து அர்ச்சித்துக் கொடுக்கப்படும் மகத்துவம் நிறைந்த எண்ணெயை கருவுற்றவர் ஒன்பதாம் மாதம் தொடங்கியதும் வயிற்றில் தடவி வந்தால் எந்த சிக்கலும் இல்லாமல் சுகப்பிரசவம் நிகழும். குழந்தை ஆரோக்கியத்தோடும் பிறக்கும் என்று பக்தர்கள் கூறுகின்றனர்.
குழந்தை வரம் வேண்டுவோர் நல்லபடியாக பிரசவம் நடக்க வேண்டும் என்று வேண்டுவோர் இது இரண்டும் நடந்து முடிந்த பிறகு குழந்தை பிறந்தவுடன் தொட்டில் கட்டி துலாபாரம் இந்த கோவிலில் வந்து செய்கின்றனர். இந்த கோவிலுக்கு செல்ல முடியாதவர்கள் வீட்டிலிருந்தே கர்ப்பரக்ஷாம்பிகை அன்னை புகைப்படத்தை வைத்து அவரின் சுலோகத்தையும் போற்றியையும் மனமார நினைத்து வணங்கினால் போதும் அந்த தாய் நமக்கு அருள் பாலிப்பார் என்பது ஐதீகம்.